கனவு என்பது....
_______________________________
கனவு கண்டு கொண்டிரு.
தூக்கத்தில்
சவம் போல் ஆன பின்
மொய்க்கும்
மனபிம்பங்களின்
ஈக்கள் மொய்த்தலை
கனவு என்று சொல்வதா?
விழித்திருக்கும் போது
இமையோர சாலைகளில்
நினைவுகளைக்கொண்டு
நடைபோடுவதே
இங்கு கனவு ஆகும்.
மனிதனில் முதலில்
மனிதனை தேடு.
சமுதாய ஓர்மை கொண்ட
ஒவ்வொரு மனிதனின்
மனத்து வரைபடம்
புகுந்து செல்.
வரலாற்றுச்சுவடுகளில்
காயம்பட்ட
மனிதம்
புண்களை ஏந்தி ரத்தம் கசிய கசிய
நிகழ்வுகளின் உயிரற்ற
சடலங்கள் கால் இடற
தடுமாறிய கால கட்டங்கள்
எத்தனை?எத்தனை?
வானத்திலிருந்து கடவுள்கள்
கூவியதாய்
இவர்கள் குவித்த கூளங்கள் எல்லாம்
வாளும் ஈட்டியும்
அல்லது
பீரங்கிகளின்
மரண உமிழ்வுகளும் தானே.
சர்வ அதிகாரம்
இறைவன்
எனக்கு கொடுத்துவிட்டான்
என்று
இவர்கள்
மக்களுக்கு அளித்தது எல்லாம்
அவலங்களின் ஓலங்கள் தானே.
ஒரு ரொட்டித்துண்டு
அல்லது
ஒரு கவளச்சோறு
கிடைக்குமா என்று
ஏங்கும் மனிதர்கள்
பார்க்க பார்க்க
அவர்களின் நாய்களுக்கு
வயிறு புடைக்க தரும்
கறி விருந்து என்பதில்
என்ன நியாயம் இருக்க முடியும்?
ஆதிக்கவெறியின்
ரத்தச்சுவடுகளைக்கொண்டு
எழுதப்பட்டவற்றையா
நாம் வரலாறு அல்லது
புராணம் என்று
காலில் விழுந்து
கும்பிட்டுக்கொண்டிருக்க
வேண்டும்?
மனிதநேயம் மட்டுமே
எங்கும் ஆளவேண்டும்
என்பதை
எந்த சாத்திரங்கள்
கொடியேற்றி
கோலோச்சியிருக்கின்றன?
ஆனாலும்
இங்கே
பசித்து எரியும் வயிறுகளின்
கேள்விகளே ஒலிக்கக்கூடாது.
மீறி ஒலித்தால்
மக்களின்
எலும்புகளும் கபாலங்களுமே
இங்கு மிஞ்சும்.
இது எல்லாம் மாறி
மனிதம் என்பதே ம்கிழ்ச்சி தான்
என்றும்
சமநீதியின்
படிக்கட்டுகளில் தான்
சமுதாயம் பயணப்படும்
என்றும்
எப்போது மாறும்?
இது என்று மாறும்
அல்லது
மாற்றப்படும் ?
என்ற மனவெளிப்பாடுகளே
அதன் இயக்கப்பாடுகளே தான்
கனவு என்று
இங்கே அக்கினித்திரையில்
சலனங்களை
நர்த்தனம் புரிய வைக்கும்.
இதை
சும்மா நோகாமல்
ஸ்வப்னம்
என்று நா வருடி வருடி
இலக்கியம் செய்வதே
மனிதனின் அயோக்கியத்தனம்
அரங்கேறும் தருணங்கள்..
கனவு என்பது காண்பது அல்ல.
நமக்கான
யுகத்தின் இமையை
உரித்து
உறுத்துப்பார்த்து
வீறு கொள்வதே கனவு ஆகும்.
____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக