சனி, 28 செப்டம்பர், 2024

உலகத்தமிழர்களே!



உலகத்தமிழர்களே

ஒன்று சேருங்கள்.

நீங்கள் இழப்பது

இன அடிமைச்சங்கிலிகள் 

மட்டுமே.

மில்லியன் ஆண்டுகளுக்கு முன்

உறைந்து போன 

பனிப்பிழம்பிலிருந்து

நுண்ணுயிர்கள்

அசைந்து கொடுக்கின்றன.

நம் தமிழ் உயிர்ப்பின் 

அகர முதல‌

ஏன் அங்கிருந்தே 

தோன்றியிருக்கக்கூடாது?

இது 

மிக மிகப்பேராசை.

இன ஆதிக்க வெறியின்

முதற் சுழி..

என்றெல்லாம் பொதுமையியல்

சான்றோர்கள் முணு முணுக்கலாம்.

இது

எதனுடைய எதிர்வினை?

சிந்து என்ற சொல் சிந்துகின்ற‌

ஒலிச்சிதறலே 

தமிழ் நெருப்பின் முதல் ஒலி தான்.

ஆனால் 

அதையே

சரஸ்வதி நதி கடாட்சம் என்று நம்மை

சாமி கும்பிட வைக்கும்

ஒரு கூட்டம்

செங்கோல் என்று உளறிக்கொண்டு

கொடுங்கோல் நடத்திக்கொண்டிருக்கிறது.

இதற்கு

உள்ளூர் வெளியூர் தந்திர ஜால்ராக்கள்

நம் செவிப்பறை கிழியும்படி

ஊடக நரித்தனங்களைக்கொண்டு

ஏமாற்று வித்தைகளை 

அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு

முன்னே

பானை ஓடுகளில்

நம் தமிழ் இதயம் கிறுக்கியிருக்கும்

அந்த வரிகள் எல்லாம்

நம் நாகரிக முன் தோற்றத்தைக்காட்டும்

இ சி ஜி இலக்கிய வரிகள்

அல்லவா?

சிந்தியுங்கள் அன்பான தமிழர்களே.

நம் குழந்தைகளுக்கு

இனிப்பு ஊட்டுங்கள்..மகிழ்ச்சி தான்.

ஆனால்

பெயர் சூட்டுகிறேன் என்று

வாயில் நுழையாத‌

காது குடைய சுகமாயிருக்கிறதே

என்ற அந்த 

அயல் ஒலிப்புக்கூளங்களை

கூட்டிப்பெருக்கி தூர எறியுங்கள்.

இது ஏதோ

உள்ளக்காழ்ப்பில் பிறந்த உறுத்தல்கள் அல்ல.

தமிழ்

இன்னும் வெறும் குப்பைப்புழுக்களாக‌

உங்கள் மீது

நெளிய விடலாமா?

அன்புடன் சிந்தியுங்கள்.

அருமைத்தமிழ் தோழர்களே.

யாதும் ஊரே யாவரும் கேளிர் தான்.

கணியன் எனும் அன்றையக்கணினியாளன்

சொல்லாமல் சொன்ன‌

ஒரு "பைத்தான் மொழி" அதில் உண்டு.

சமஸ்கிருத அனக்கொண்டாக்கள்

உன்னை விழுங்குவதற்குள்

நீ விளங்கிக்கொள்.

யாதும் ஊரே என்ற முழக்கம்

உலகத்தமிழின் மனித நேய முழக்கம் தான்.

கடவுள் மொழிக்குள்

பொதிந்திருக்கும்

கயமைப்பொருளை உணர்ந்து கொள்வதே

நமக்கு வேண்டிய‌

இன்றைய "கடவுள் வாழ்த்துக்கள்"

"அறிவுப்பெருங்கடல் நீந்துவார் நீந்தார்

அறிவினை அறியாதார்."

_____________________________________________

சொற்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக