நடுவுல கொஞ்சம் "பட்ஜெட்டை"க்காணோம்.
=======================================================ருத்ரா
கொஞ்சம் என்ன
நெறயவே காணோம்.
பைண்டு பண்ணுன புத்தகத்த
தெறந்தா
முதல் அட்டையும்
கடைசி அட்டையும்
மட்டும் தான்
பத்திரமா இருக்கு!
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய்
இந்த "பண்டோரா" பெட்டியை
திறந்து கொண்டே திறந்துகொண்டே
இருக்கிறார்கள்.
திறக்கும் போதே மூடிக்கொண்டே
திறந்து கிடப்பது போல் காட்டும்
அற்புதப்பெட்டி இது.
வறுமைக்கு கோடு போட்டவர்கள்.....
எல்லாருக்கும் எல்லாமும் இதோ
என்று
கனவுகளை பிசைந்து
தின்னச்சொன்னவர்கள்......
ஐந்தாண்டு திட்டங்களின்
ரங்கோலி வரைந்தவர்கள்.....
ராமராஜ்யம் எனும் அதிசயம்
உள்ளே அடைந்து கிடப்பதாய்
தூப தீபம் காட்டியவர்கள்.....
மக்களின் மனதையெல்லாம்
மங்களாசனம்
செய்த சாசனம்
எங்களுடையது என்று
மார் தட்டிக்கொன்டே இருப்பவர்கள்...
சாசனம் இருக்கிறது..
புத்தகம் இல்லை.
புத்தகம் இருந்தால்
வாக்கியங்கள் இல்லை.
வாக்கியங்கள் இருந்தால்
வார்த்தைகள் இல்லை.
வார்த்தைகள் இருந்தால்
அர்த்தங்கள் இல்லை.
அர்த்த சாஸ்திரங்கள்
ஆயிரம் இருக்கு.
அர்த்தங்களைத் தேடுங்கள் என்று
சொல்கிறார்களே என்று
ஐந்து ஐந்து ஆண்டுகளாய்
பெட்டிகளில் தேடினோம்..
மின்னணுப்பொறிகளில் தேடினோம்..
பஞ்ச பாண்டவர்களாய்
பாரதத்தையே தேடுகிறோம்..
நடுவுல கொஞ்சம் பாரதத்தையே காணோம்.
வியாஸரைக்கூப்பிடுங்கள்.
=======================================================ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக