செவ்வாய், 28 மே, 2019

மனவிளிம்பு





மனவிளிம்பு
========================================ருத்ரா இ.பரமசிவன்


மனவிளிம்பு ஓரத்தில்
நுரை ஜரிகையிட்ட
ஆயிரம் கனவுகள்.
கடற்குருகுகள்
வெள்ளித்திவலைகளை
மீன்கள் என்று எண்ணி
அலகு கவ்வி கவ்வி
களைத்தது போல்
நானும்
அவள்
மின்னல்  வெட்டுப்
பார்வைகளையெல்லாம்
அதே வைரத் திவலைகளில் தான்
என் மௌன வலை வீசி
பிடிக்கத்துடிக்கிறேன் .
யார் அவள்?
யாரோ ?எவளோ ?
மின்னலுக்கு முகவரி எது?
அந்த பார்வை மட்டுமே
இந்த வானம் முழுவதும்
இந்த கடல் முழுவதும்
பரந்து விரிகிறது!
எனக்கு தோன்றும்
முகத்தையெல்லாம்
செதுக்கிப்பார்க்கிறேன்.
அதோ அந்த குருகுகளைப்போல.
அவற்றின் அலகு உளிகள்
அந்த நுரையில் எதை செதுக்குகின்றன?
அவை ஒவ்வொரு தடவை
கொத்தும்போதும்
என் இதயம் வலிக்கிறது.
அவை என்றாவது ஒரு நாள்
அப்படி செதுக்கி செதுக்கி
அவள் முகத்தின் வடிவை காட்டிவிட்டால்...
வேண்டாம்..வேண்டாம் .
என்னால் தாங்க முடியாது .
முகம் தெரியவே வேண்டாம் .
வேண்டாம் ..வேண்டாம்.
கைகளால்
அந்த குருகுகளை விரட்டுகின்றேன்.
அவை அங்கே தான் கொத்திக்கொண்டிருக்கின்றன.
மீண்டும் மீண்டும் விரட்டுகின்றேன்.
அவை கடலை நோக்கி பறக்கின்றன.
நானும் விடாமல் துரத்துகிறேன்
துரத்திக்கொண்டே இருக்கின்றேன்.
நீலக்கடல் முழுவதும் என்னுள் .
அந்த நீர்விளிம்பில்
கலங்கலாய்
சிவப்பாய்
ஒரு பிரம்மாண்ட செர்ரிப்பழம்.
அது சூரியப்பழமா !..
இல்லை
அவள் முகமா ?
தெரியவில்லை.
அந்த நீலக்கடல் முழுவதும்
என் இதயத்தின் மேல்.
அல்லது
என் உடம்பின் மேல்.
முள்ளு முள்ளாய் போர்த்த மீன் கூட்டம்
ஊசிப்பற்களால்
என்னை மொய்க்க
என் உடம்பு அங்கு மாயம்.
இருப்பினும்
அங்கு தான் என் இதயம்
ஆம்
இன்னும் அங்கு தான் என் இதயம்!

ஒவ்வொரு மாலையிலும்
அந்த கடற்கரையில் நடக்கின்றேன் ..
அந்த இதயத்தை தேடி...

===================================================================
புகைப்படம் : நான் எடுத்தது ...அமெரிக்கா  லாஸ  ஏஞ்சல்ஸ் ...சுமா..பீச். ..07.10.2015.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக