திங்கள், 6 மே, 2019

சிங்கத்தமிழ் நாடே

சிங்கத்தமிழ் நாடே
==========================================ருத்ரா


சிங்கத்தமிழ் நாடே நீ
சிலந்திக்கூடு ஆனது எப்போது?

தமிழன் தமிழனைக்கண்டு
மனம் நொந்த
பராசக்தியின்
அன்றைய காட்சி இன்றும்
மாறவில்லை.
தமிழ் மொழியை
தரையில் போட்டு மிதித்துவிட்டு
சமஸ்கிருதத்துக்கு
அர்ச்சனை பண்ண‌
அலை மோதும் மந்தைகளாக‌
மாறிப்போனதை பார்க்கிறோம்...

தமிழனுக்கு வீட்டில்
ஒரு குழந்தை பிறக்கிறது
இனிய தமிழ் நம் நாவில் இருக்க‌
கணினிக்குள் நுழைந்து
அந்த சமஸ்கிருதக்காரர்கள்
கொட்டியிருந்த கூளத்திலிருந்து
ட்ரிஷிகா பிரிஷ்கா என்று
ஒரு பெயர் சூட்டப்படுகிறது.
அர்த்தம் இன்றி
குழந்தையின் வாழ்க்கையும்
தொடங்குகிறது.
தமிழை செத்த பிணமாய்
தோளில் சுமந்து கொண்டிருக்கும்
தமிழன் இவன்.

"கல் பொரு சிறு நுரை"...
"அணிலாடு முன்றில்"
"புதல் மறைத்து வேட்டுவன்
புள் சிமிழ்த்தற்று."
"நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாளது ..."
"கல் பொரு து இறங்கும் மல்லல் பேர் யாறு "
"ப ஃ றுளியாறு ம் பன்மலை அடு க்கமும் "
என்று
ஒவ்வொரு எழுத்தையும்
ஓவியம் ஆக்கியவன் அல்லவா
தமிழன்!


இவன் கொண்டாடிக்களிக்கும்
தமிழ்ப்புது வருஷம்
ஸ்ரீ விகாரி அன்று தான்
தொடங்கியிருந்தது.
ஆயினும் அந்த அறுபது ஆண்டு
மாலையில்
வெறும் சம்ஸ்கிருத நார்
மட்டுமே இருந்தது.
தமிழ்ப்பூ ஒன்று கூட இல்லை.
மூளிவருடங்களை
ஜெபமாலையாய் உருட்டும்
கண் இழந்த குருடன்
தமிழன்.
133 அடி உயர வள்ளுவன்
உரத்து ஒலித்தும்
தமிழ்ப்புத்தாண்டின்
ஒலி கேட்காத செவிடன்
தமிழன்.

தமிழ் மண்ணை
தமிழ் உயிரை
காவு வாங்கும்
காவிக்கூட்டத்துக்கு
குத்தகை விட்டு விட
கும்மாளம் போடும்
கும்பலுக்குள்
புதையுண்டு கொண்டிருப்பவன்
தமிழன்.

தமிழா விழி!
தமிழா எழு !

இந்த உடுக்கையொலி
உனக்கு கேட்கவில்லை.

அப்போதும் சொல்கிறாய்.
அந்த "கவரை" சீக்கிரம் கோடு.
பறக்கும் படையின் "சைரன்"
அதோ கேட்கிறது பார்!

======================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக