அன்னையர் தினம்
===============================================ருத்ரா
ஒரு நாள் போதுமா..?
இன்றொரு நாள் போதுமா?
அம்மா எனும் அன்பின்
ஏழ் பெருங்கடலே!
உன் படைப்பின்
உயர் வேதம்
பற்றி பாராயணம் செய்ய
இன்றொரு நாள் போதுமா?
அந்த வேதங்கள்
சோம பானத்தையும்
சுரா பானத்தையும்
முட்ட முட்ட க்குடித்து
போதை மதங்களை
ஸ்லோகங்களாய்
வாந்தியெடுத்தன.
உன் படைப்பு வேதம்
உன் ரத்தத்தையே உருக்கி
உயிர் பூசி
பிள்ளையாய் வார்த்தது.
அம்மா!
இவர்கள் எதை எல்லாம்
சிகரம் என்று காட்டுகிறார்களோ
அதில்
உன் மெட்டிச்சுவடுகள் கூட
தெரிய வாய்ப்பில்லை.
அதையும் தாண்டிய உயரம்
உன் உயரம் அம்மா!
உயரம்
எல்லை
வரம்பு
எல்லாமே
உடைந்து போயின
உன் அன்பின் முன்னே.
காலம் பூத்து முகிழ்த்ததே
அம்மா
உன் முலைப்பால் சொட்டு
இந்த கால உயிர்களின் வாயில்
விழுந்த பொழுது தானே
விடிந்தன பொழுதுகள்!
அப்படியென்றால்
உனக்கு ஏது ?
அந்த காலமும் வருடமும்
காலண்டர் தினமும்?
வலி உயிர் போகுது என்பார்கள்.
ஆனால்
அந்த வலியையே
உயிராக்கி பயிராக்கி
உன் மடியிலேயே
அந்த பிரபஞ்சத்துடிப்புகளை
விவசாயம் செய்பவள் அல்லவா நீ!
கடைகளில் ஷாப்பிங் செய்து
மகிழ்ந்து கொள்ளுங்கள்.
தொலைக்காட்சிகளில்
இதற்காகவே மடித்து மடித்து
வைக்கப்பட்டிருந்த
தலைப்புகளில்
சொற்போர் நிகழ்த்துங்கள்.
நிச்சயம்
அன்னை எனும்
அந்த சினிமாக்காவியத்தை
கண்டு மகிழுங்கள்.
அன்னை என்பவள்
பெற்றுத்தான் நிரூபிக்க வேண்டுமா?
அந்த சினிமாவில்
அந்த ஒப்பற்ற நடிகை பானுமதி அவர்கள்
தன் ஒவ்வொரு
இதயத்துடிப்பையும்
பிரசவம் ஆக்கி ஆக்கி
அன்பின் பிரவாகத்தை
வெளிப்படுத்தினார்களே
அது அம்மா என்பதன் உயிர்ப்பிம்பம்.
ஓ! குழந்தைகளே
உங்களைத்தாங்கி நிற்கும்
இந்த மண்ணின் சுவாசமே
உங்கள் அன்னையின் தொட்டில்.
ஆம்!
இங்கு குழந்தைகளின் தாலாட்டே
இந்த அம்மாவுக்கு இப்போது தேவை.
அந்த ஜனநாயகம்
இப்போது மூச்சடங்க விட்டு விடாதீர்கள்
ஓ! குழந்தைகளே.
அன்னையே குழந்தை!
குழந்தையே அன்னை!
ஜனநாயக யுகம் மரித்திடல் கூடாது.
அந்த ஓட்டுப்பெட்டிகளின்
"கோக்கூன்களிலிருந்து"
என்ன புயலின் சிறகுகள்
என்ன பெயர் சூடி
வரப்போகிறதோ ?
ஜனநாயக அன்னையின்
புன்னகை வெல்க.
தாய் மண்ணே வணக்கம்!
தாய் மண்ணே வணக்கம்!
வந்தே....மாதரம்...!
===============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக