புதன், 9 ஏப்ரல், 2025

வலிது வலிது பொய்மை வலிது!

வலிது வலிது பொய்மை வலிது!

_______________________________________


எதுவும் செய்வார்

கடவுள்!

தன்னையே

"இருக்கு" என்று

திகில் பூசிக்கொண்டு

உடுக்கும் அடிப்பார்.

"இல்லை" என்று

புரட்சிக்கனல் 

மூட்டவும் செய்வார்.

அந்த சொற்பொழிவாளர்

சதுரங்கக்காய்களை

அற்புதமாய் நகர்த்தினார்.

ஏன் தெரியுமா?

கேள்வியை வீசி

இன்னும் தொடர்ந்தார்.

அவருக்கும்

"ஒரு அரசியல்" உண்டு.

எதைச்சொன்னால்

இந்த விட்டில் பூச்சிகள்

அவரையே

வளைய வளைய வந்து

கொண்டிருக்கும் என்பதும்

அவரே 

அறிந்து வைத்திருக்கும்

ஒரு 

மெய் அல்லது பொய்

அல்லது 

பொய்மெய் அல்லது

மெய்ப்பொய்....."

ஐயா..

போதும் அய்யா

தலை சுற்றுகிறது.

"அர்த்தநாரீஸ்வரர்..."

"ஆணும் அவரே..பெண்ணும் அவரேவா?"

"அல்ல அல்ல‌

இது "அர்த்தானர்த்தாயீஸ்வரர்"

ஆத்திகாநாத்திகர்..."

"ஆளை விடும் அய்யா.

அந்த சப்பளாக்கட்டையை

கடாசிவிட்டு ஓடும்!"

பக்தர்கள் கொந்தளித்தார்கள்.

.................

....................

பிரபுவே 

என்ன இது?

உங்கள் வேடங்கள் மட்டும்

தரையில் கிடக்கின்றன.

பிய்ந்து பிய்ந்து சின்னாபின்னமாய்..

பிரபு.."

நாரதர் வெகு நேரமாக

சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

குரல்கள் கேட்கின்றன.

"நிறுத்தும் நாரதரே

உம் பம்மாத்துகளை!

எல்லாம் தெரிந்து கொண்டே..

நீரும் "ஆட்டம் ஆடியது" போதும்.

"நானே போய்

எல்லாம் சொல்லிவிடலாம் என்று

நான் இல்லை 

இல்லவே இல்லை என்று"...

சொல்வதற்குள்

இந்த கல்லெறிகளே மிச்சம்.."

பிய்ந்து போன பிம்பங்கள்

கீழே கிடக்க‌

உருவம் இன்றி

அருவம் மட்டும் அங்கே

ஒலித்துக்கொண்டிருந்தது.


_____________________________________________

சொற்கீரன்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக