வெள்ளி, 14 ஏப்ரல், 2023

இழை

 


நான் கண்ணாடியா?

பிரதி பலிப்பா?

பூசப்பட்டிருக்கும் ரசம்

என் பின்னேயா? முன்னேயா?

கண்ணில் தூக்கம் அழுத்தும்போது

காணாமல் போய்விடுகிறேன்.

அந்த திரை கடல் நுரைகளால் ஆனது.

அதுவும் காதல் செய்கிறது.

கருமாதி நடத்துகிறது.

முதன் முதல் எழுத்தும் அதன்

பீய்ச்சல்களும் ஏதோ ஒரு

லாவாவைத்தோய்த்துக்கொண்டு

வந்தனவோ.

எழுவாய் பயனிலை செயப்படுபொருள்

எல்லாம்

இந்த ரத்தக்குமிழிகளின் 

நொதிப்புகளில்

ஏதோ இலக்கணம் சொல்கிறது.

ரைபோஸோம் அணுத்துடிப்பின் அமிலக்கசிவுகள்

எம் ஆர் என் ஏ அல்லது 

டி ஆர் என் ஏ என்று

சங்கிலி கோர்த்துக்கொள்கிறது.

டி ஆக்சி ரைபோ ந்யூகிளிக் ஆசிட் என்று

சொட்டும் இணைப்புகளில்

இங்கு எல்லாம் 

ருத்ரம் சமஹம் பாடுவதாய்

பெரிய பெரிய உடுக்கைகளை

குலுக்கு குலுக்கு என்று குலுக்குகிறார்கள்.

பூஜ்யங்களின் பூர்ணாகுதி என்று

புல்லரித்துக்கொள்கிறார்கள்.

சிக்மண்ட ஃப்ராய்டு எல்லாவற்றையும்

துடைப்பம் கொண்டு பெருக்கி

சுத்தம் செய்கின்றார்.

வெள்ளைத்தாளிலும் கூட‌

ரத்த நரம்புகளின் மயிரிழைகள்....

விலுக்கென்று விழித்தபின்

புத்தகங்களின் பக்கங்களில்

மைல் கற்கள் பாறாங்கல்லாய்

அமுக்கிக்கொண்டு பிதுக்கிக்கொண்டு

வெளிப்படுத்துகிறது.

உயிரின் ஜெல்லிப்பிழம்பை.

நீண்ட நீண்ட இழை இது.

இந்த ஃபைபர் ஆப்டிக்கில்

காலமும் வெளியும் 

இருளும் ஒளியும்

கனவும் நனவும்

பாரலல் யுனிவர்ஸ் எனும்

கரப்பான் பூச்சிக்கூட்டமும்

பரபரத்து மீசையும் நீண்டமயிர்களுமாய்

விண்வெளியை நக்கிக்கொண்டிருக்கின்றன.

அதன் புனித எச்சில்

இதோ இந்த ஜே டபிள்யு எஸ் டி எனும்

"விண்ணோக்கி"யிலிருந்து

பஞ்சு பஞ்சாய் பறத்துகிறது.

பூவென்று ஊதிவிடுகிறேன்

இந்த பிரபஞ்ச தூசியை

என் மீதிருந்து...


_________________________________________________________

சேயோன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக