திங்கள், 24 ஏப்ரல், 2023

முரண்பாடுகளின் ஆற்றுப்படை

 










முரண்பாடுகளின் ஆற்றுப்படை





முரண்பாடுகளின் ஆற்றுப்படையே வரலாறு 


என்று


புத்தகம் எழுதினாலும் எழுதியிருப்பார் 


கார்ல் மார்க்ஸ் இன்று.


கல்லுடைக்கும் தொழிலாளிக்குள்


கார்ப்பரேட்டுகள் 


கருத்தரித்துக்கொண்டு


வந்தாலும் வருவார்கள்.


ஆனாலும்


மனித நேயமும் மக்கள் அறமும்


முகம் மாறிப்போன 


ஒரு வக்கிரம் கொண்ட பரிணாம


சமுதாய நரம்போட்டத்தின்


நுட்பம் இங்கே


நம் கணினிக்காட்டுக்குள் 


தொலைந்து கிடக்கிறது.


அறிவால் உழைக்கும் மூளைச்செதில்களும்


வியர்வை வர்க்கத்துள் தான் 


இருக்கிறது.


மேதினத்தின் செங்கொடி அங்கேயும் 


அசைவதை பார்க்கத்தான் பார்க்கிறோம்.


லட்சங்களில் சம்பளம் பெறுபவர்கள்


அரை வயிற்று அன்றாடங்காய்ச்சிகளுக்கும்


சேர்த்து 


போராட்டத்திற்கு "அல்காரிதம்"எழுதுகிறார்களா என்ன?


அந்த கம்பெனிகளின் 


க்யூ ஒன் க்யூ டு


பங்கு மூலதன பலூன்பெருக்கத்துக்கு மட்டுமே


உழைக்க முடியும்.


ஓட்டு போடுபவர்களுக்கு கூட‌


ஆயிரம் ஆயிரமாய் கொட்டிக்கொடுத்து


கோடிகளின் "இமயங்களை"


தங்கள் வீட்டுக்கொல்லைப்புறத்தில்


பதியம் போடும் கட்சிகளே


களத்துக்கு வருகின்றன.


மக்களுக்கு சித்தாந்த வெளிச்சம் தரும் கட்சிகளோ


ஒரு புனிதம் காக்கும் சல்லாத்துணிக்குள்


மூடிக்கிடக்கின்றன.


கோடி கோடி மக்கள்


புராண சம்பிரதாய அபினியே போதும் என்று


முடங்கிக்கிடக்கின்றனர.


இதில் அந்த "எட்டுமணி நேர"வேலை 


எனும் ஆற்றல் மிக்க "துருவ"ந்ட்சத்திரம்"


துருப்பிடித்த ஒரு வானத்துள்


உதிர்ந்து கிடக்கிறது.


மத ஆதிக்க சங்கிலிகளையும்


சாதி முட்டுக்கட்டைகளையும்


தகர்த்து நொறுக்கும் பலமான‌


சிந்தனை சம்மட்டிகளே இன்றைய தேவை.


பன்னிரெண்டு மணிநேர வேலை


எனும் 


"புதிய ஏற்பாட்டிலும்"


பழைய ஏற்பாட்டின் வேதாளங்கள் தான்


சப்பரம் தூக்கிக்கொண்டிருக்கின்றன‌


என்று புரியவைக்க்றோம் என‌


எழும் போராட்ட அலைகளில் 


பிற்போக்கு கும்பமேளாக்களும் கும்பாபிஷேகங்களும்


கொடி தூக்கி வருகின்றன என்பது


ஒரு அபாயத்துள் அபாயம் ஆகும்.




_______________________________________________________


சமுதாய புத்திரன்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக