வியாழன், 6 ஏப்ரல், 2023

ஒரு ரோஜாவை கையில் ஏந்தி

 


ஒரு ரோஜாவை கையில் ஏந்தி

சுழற்றி சுழற்றி பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதன் அடுக்கு அடுக்கான 

இதழ் வண்ணமும் அழகும்

என் மௌனத்தையே மகரந்தங்களாய்

சிதறடித்து என்னுள்

சொற்சிற்பங்கள் செதுக்கின கவிதை என்று.

நேரம் செல்ல செல்ல 

நான் எங்கோ எதிலோ கரைந்து போனேன்.

அது உருமாற்றமா?

தருணங்களின் கரு மாற்றமா?

எப்படியோ தாவிவிட்டேன்.

காலத்தின் கோடி கோடி அடுக்குகள்

ஒரு புள்ளியாய்

என் மூக்கு நுனி பட்டாம்பூச்சி போல்

சிறகுகளில் "சாமரம்"வீசியது.

திடீரென 

பால்வெளி மண்டலங்கள் ஆயிரம் ஆயிரமாய்

உருண்டு திரண்டு

சிவப்பாய் செம்பிழம்பாய்

சுழன்றது.

அதுவும் ஒரு உயிர்ப்பின் நெருப்பா?

அப்பாடா!

காலவெளிப்பயணத்தின் புழுக்கூடு

என்னை துப்பி விட்டது.

மீண்டும் புல்வெளியில் விழுந்தேன்.

கைவிரல்கள் ரோஜாவின் இதழ்களை

இழந்து போயிருந்தன.

அந்த பூவின் காம்பைப்பிடித்திருந்த 

இடத்தின் நுனியில்

அந்த முள்

ரத்தக்கசிவோடு

கடு கடுத்தது!

என் அருமை ரோஜாவே!

உன் அழகை இப்படியும்

ஒரு ரத்தக்கசிவில் 

மொழிபெயர்த்து முத்தமாக்கி

அண்டம் விட்டு அண்டம்

பெயர்த்து விடமுடியுமா என்ன?


___________________________________________________‍

சேயோன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக