செவ்வாய், 11 ஏப்ரல், 2023

தொல் கபிலர்.

 நற்றிணை 114

தொல் கபிலர்.

............

"துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்

பொருதிரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்"

......


அகழ்நானூறு 36

____________________________________

சொற்கீரன்.


கோடு ஏந்திய பெரு மாகளிற்றினை

உழுவை தொலைச்சிய பின்றை

களிறு பச்சூண் தின்றபின் எஞ்சிய‌

வள்ளுகிர் முணக்கிய நுண்பரல் எக்கர்

வீ சொரிந்தன்ன புள்ளி நீழல் வறுகண்

வடக்கிருந்த முற்றிய முதுவீழ் சான்றோர் 

தொல்லிய ஊழுடன் தெள்ளிய காலை

"துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்

பொருதிரை நிவப்பின் வரும் யாறு "அன்ன‌

கறங்கு வெள்ளருவி நுண்டுளி போழ்ந்து

கணம் தொரு கணம் தொரு உடையுபு

இன்னுயிர் நீட்டிய நுண்வரி எழுதி

நுழைபடுத்தாங்கு நுவலிய சொல்லி

கொல்லறம் ஓப்பி நல்லறம் வேட்ப‌

உள்ளிய திண்ணியர் மாண்பின் ஓர்ந்த‌

நற்றமிழ் அருஞ்சொல்  ஆள்தல் ஓர்மின்.


___________________________________________________



நற்றிணை 114

தொல் கபிலர்.

............

"துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்

பொருதிரை நிவப்பின் வரும் யாறு..."

...........

நம் சங்கத்தமிழ்ப்பெரும்புலவர் கபிலர் பற்றி அறிவோம்.அவர் புலமை வியக்கத்தக்கது.கபிலர் என்ற பெயருடைய பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள்."தொல் கபிலர்" என்று ஒரு புலவர் நற்றிணையில் (பாடல் 114) இயற்றியிருக்கிறார். பெயரை வைத்துப்பார்த்தால் இவர் தான் தொன்மைக்கபிலரோ என எண்ணதோன்றுகிறது.ஆனால் அவர் ஒரு அழகிய ஆற்றங்கரையை "தொல் கரை"என்று அழகு பட எழுதுகிறார்.அதற்கு அவர்கண்ட இயற்கைக்காட்சி எத்துணை நுட்பமானது என்று நீங்களே அவர் வரிகளைப்படித்துப்பாருங்கள்.


"துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்

பொருதிரை நிவப்பின் வரும் யாறு..."


தூரல் மழை ஒரு தூரிகையாகி ஒரு இயற்கை ஓவியம் தீட்டுகிறது.தூரல் "பொறி" போல் பெய்து அந்த ஆற்றங்கரை முழுவதும் புள்ளிக்கோலம் போட்டுவிட்டது.அதற்கு முன் "பழங்கரையாய்" இருந்தது அந்த சாரல் மழைக்குப்பின் அது புது பொலிவு பெற்று விட்டது.இந்த நிகழ்வு நான் எங்கள் ஊர் தாமிரபரணிக்கரையில்

ஏற்படுவதை வெகு அழகோடு உற்றுப்பார்த்திருக்கிறேன்.ஆற்றில் குளிக்க வரு முன் அப்போது தான் அந்த 

பட்டுமணற்கரையில் தூரல் போட்டு ஓய்ந்திருக்கும்.அப்பொது தான் அந்த மணல்விரிப்பில் மழைத்துளிகள்

பொட்டு பொட்டாய் விழுந்து ஒரு பேரழகுக்காட்சியை உருவாக்கியிருப்பதை கண்டு வியந்து களிப்படைந்திருக்கிறேன்.இதே இயற்கையின் அழகை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே கண்டு எழுதிய 

அந்த "தொல் கபிலர்"தன் சொல் திறம்  எனும் யாழ்மீட்டி இன்று வரை நம் நெஞ்சை வருடுகின்றார்.அப்பப்ப!

தமிழின் நுண்மையும்  இனிமையும் ஈடு இணையற்றது.


yet to be edited.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக