செவ்வாய், 18 ஏப்ரல், 2023

சொற்றிணை

 சொற்றிணை

________________________________________________

சொற்கீரன்.





புணரி விலங்கின் அகல் இரு முந்நீர்

விசும்பு தோய் உருகெழு திரைகள் மேவ‌

குடமும் குணமும் கைக்கொளீஇய‌

துறையாவும் சூழ்முற்றிய செருவின் 

திருவாய் கிழி துணி நுடங்க முரல்வ‌

முடித்து நெடுநிலம் பற்றிய பின்

நிலம் தரத் தெரிந்து குடையும் திருப்பிய‌

செங்கொற்றச் செழும்பேர் பாண்டியனை

மதுரைக்காஞ்சியின் மாங்குடி மருதன்

திறம் காட்டி சீரொளி காட்டினன் அவன்

திரள் அம் நெஞ்சின் நேர்மையும் சாற்றினன்.

மறம்படுத்த மள்ளற் பாண்டியன்

மடம்படுத்த கேண்மையின் ஒருபால்

அடர்செறி செரு ஆங்கு வென்றிட்ட போதும்

தோற்றவருக்கே நிலம் மீட்டு ஈந்தனன்.

தொல்லாணை நல்லாசிரியர் கூட்டுண்டு

தமிழ் வேள்வி சிறக்கவே நிலந்தரு திருவின்

நெடியோன் ஆயினன் பல்யாக சாலை

முதுகுடுமியின் கொற்றவனும் ஆயினன்.

அறிவை நோக்கி கேட்பதும் கேள்வி.

அறிவை யாதெனக் கேட்பதும் கேள்வி.

அவ்வாங்கே யாவரும் அறிவை ஓர்ந்து

விருப்பம் கொள்ளல் வேள்வி என்ப.

அறிவைக்கூர் தீட்டி நெருப்பின் அன்ன‌

அறிவை  வளர்ப்பதும் வேள்வி  என்ப.

மறை எனில் உள்ளுறை உவமம் என‌

தமிழியல் வாழ்வின் அறிவின் திரள்தரு

பொருண்மொழிக் காஞ்சி காட்சி தெளிந்தே

வேள்வியும் கேள்வியும் கேள்வியும் வேள்வியும்

இழையாடி ஆங்கு ஆற்றுப்பெருக்காய்

ஆற்றுப்படுத்தினர் ஆன்றோர் அன்று.




_____________________________________________________


சொற்றிணை

________________________________________________

சொற்கீரன்.


நற்றிணை எட்டுத்தொகையுள் ஒன்று என அறிவோம்.

வாழ்க்கையின் ஒழுங்கியல் வாழும் நிலம் அதன் இயற்கை சூழல் புள் மரம் நீர் பொழுது இவற்றை மையமாகவே கொண்டு இருந்தது தொல் தமிழர் காலத்தில்.அந்த ஒழுக்கமே திணை எனப்பட்டது.அது போல் 

தமிழன் மொழிந்த "சொல்"மிக மிக மையமானது.வளம் செறிந்தது.அவன் வாழ்வியலின் உயிர்ச்சியை மலர்ச்சியை வெளிக்காட்டிய ஊடகமே ஒவ்வொரு தமிழ்ச்சொல் எனலாம்.சங்க இலக்கியச்சோலையுள் புகுந்தால் 

இது நன்கு தெளிவாக அறியப்படும்.இப்படி சொல்லே தமிழனுக்கு ஒழுக்கம் அல்லது அறம் அல்லது அறிவு

எனும் உட்கிடக்கையை வெளிக்கொணர்ந்தது.இதைப்பற்றி நான் எழுதும் சங்கநடைச்செய்யுட் கவிதை வடிவமே

"சொற்றிணை" ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக