ஒப்பீடுகள்
___________________________________________________
லோகேஷ் கனகராஜும்
மணிகண்டனும்
கமல்ஹாசனை தங்கள்
கேமிராவின்
கலைடோஸ்கோப்பில்
திருப்பி திருப்பி பார்த்து
உடைந்து நொறுங்கி குலுங்கி குலுங்கி
வண்ணம் காட்டும்
அந்த நடிப்பின் தருணங்கள்
மிக மிக அற்புதமானவை என்பதில்
யாருக்கும் இரண்டாம் கருத்தே இல்லை.
40 50 களில்
50 60 களில்
70 களில்
இப்படித்தான்
எம் கே டியும் பி யு சின்னப்பாவும்
சிவாஜியும் எம் ஜி ஆரும்
அவரவர் இமயங்களில் கொடி நாட்டினார்கள்.
ரஜனிகாந்தின் அந்த அட்டை இமயத்தின் சிகரம்
மிக மிக உயரத்தில் தான் இருக்கிறது.
இப்போது விஜயும் அஜித்தும்
ரசிகர்களுக்கு மிக மிக ருசியான
பாப்கார்ன் பொட்டலங்கள் தான்.
இருப்பினும் இன்றுவரை
சர்வ தேச விருதுகளின் கிட்டங்கிகளை
வியப்பால் இமை விரிய வைத்துக்கொண்டே இருக்கும்
திரைக்கதைகளை
உயிரோட்டமாகத்தந்த
சத்யஜித் ரேய் அடூர் கோபாலகிருஷ்ணன்
மற்றும் கிரிஷ் கர்னாட்
போன்ற திரை ஆளுமைகள்
தந்த
அந்த மூழ்கடிக்கமுடியாத ஆழங்களின்
சமுதாயத்தினவுகளையும் தீர்வுகளையும்
நாம் இன்னும் தரிசிக்கவில்லை
என்பதே
ஒரு உறுத்தல்காடுகளில்
உலவிக்கொண்டிருக்கும்
அந்த நிழல் ரோஜா!
இந்த ரோஜாவிலிருந்தும்
தெறித்திருக்கின்றன சில ஒளிமகரந்தங்கள்.
வெற்றிமாறனுக்கு
வெறும் தூசியும் துரும்பும் போதும்
சமுதாயவலியின் ரத்தம் வடியச்செய்ய.
ஆனால்
சூரியை வைத்து அந்த போலீஸ் லத்தியில்
சொட்டு சொட்டாய் உதிர்ந்த
ஒரு சூரியபிழியலை
மக்களின் வலியாய் வடித்திருக்கிறார்.
விடுதலைக்கு இப்படியொரு
புதிய பரிணாமமா?
இருப்பினும் இந்த
ஒப்பீடுகள் இன்று வரை
எழுதவும் படிக்கவும்
மிக மிக சுகமே.
____________________________________________________
சேயோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக