மேதினம்
____________________________சேயோன்.
சடங்கா?
சரித்திரமா?
சடங்கு ஆகிப்போன
சரித்திரமா?
நைந்து போய் பிய்ந்து போய்
இருந்தாலும் கொடிகளின்
சிறகுகள்
சிவப்பை உயிர்ப்பை
வெளிற விடவில்லை.
எட்டு மணி நேரம் அப்போது
நம் விடியல் விளிம்பு.
உன் கனவுகள்
எட்டும் வரை எம்பு.
மணிகள் வேலி தாண்டி
கடிகாரம் உடையட்டுமே.
வெறிக்கும்
எதோ ஒரு நிறம் காட்டி
மூர்க்கம் ஊட்டும்
கார்ப்பரேட்டுகளின் குத்தீட்டிகள்
இந்த காளைகளுக்கு
மறைக்கப்படுகின்றனவா?
கில்லிங் இன்ஸ்டிங்க்ட்
உன்னிடம் உண்டு.
இந்த இமயங்களைத் தட்டித்தூகு
என்று
வெர்ச்சுவல் ரியாலிடியில்
சூரியனின் பாப்கார்ன்ஸை
கொறித்துக்கொண்டிருக்கலாம்
என கணினியுக "கேம்ஸ் லேசர்கள்"
கண் சிமிட்டுகின்ற்ன.
இளைய தலைமுறையின் செம்புயல்
"நரை"கண்டுவிட்டனவோ?
சமுதாய ஓர்மை என்ற சொல்
கூர் தீட்டப்பட வேண்டும்.
மழுங்கடிக்கப்படவும்
மடை மாற்றம் செய்யப்படவுமே
ஆயிரம் ஆயிரம் "ஆப்"கள் இங்கே.
கிராமத்து மண்ணாங்கட்டிகளுக்கும்
ஓடிபி எனும் பாஸ்வர்டுகள்
புகுத்தப்படுகின்றன.
டையலக்டிகல் மெடீரியலிசம்
என்று பூதம் காட்டும்
ஜோல்னா பையர்கள்
பார்வை கழன்றவர்களாக
மாறிப்போனார்களோ?
இந்த மக்களை தினம் தினம்
கழுவேற்றிக்கொண்டிருக்கும்
"பச்சை முரணபாடுகள்"
அந்த சாதி மத
நச்சுத் தினவுகள் தான்
என்ற பால பாடம்
இன்னும் இங்கு விளங்கவில்லையே.
விடியல் என்றால் வானம் எல்லாம் கிழிந்து
கன்னிக்குடம் உடைக்கும் என்ற
ஒரு பிர்சவ வலியின் தேசியக்கொடிகளா
இந்த மே தினக் கொடிகள்?
இல்லை.இல்லை.
உழைக்கும் நரம்பின் சிவப்பு வேர்வையே
இந்த மண்ணின் உயிர்ப்பு வேர்கள்.
அந்த உந்துதலே
நம் விரல் நுனியிலிருக்கும்
நம் புதிய யுகம்!
________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக