ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், 5
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி, 10
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?
மேலைத் திசையிலே சாய்ந்து விழுகின்ற ஆதித்த மண்டிலம் ஆங்குள்ள அத்தமனக் குன்றின்வாய் மறையாநிற்ப; மயங்கிய மாலைக் காலத்தில் கட்குடித்து மகிழ்ச்சியுற்ற பரதவ மாக்கள்; தாம்¢ வருந்தாது பெற்ற பெரிய மீனை எளிதாக விற்று; ஞெண்டு விளையாடிய புலவு நாற்றத்தையுடைய மணல் பரந்த முன்றிலையுடைய நோக்குவார்க்கு விருப்பம்¢ வருகின்ற சிறுகுடியின்கண்ணே; செல்லலுற்ற ஒழுங்குபட்ட வழியின் அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பினாற்போல; நெய்தலின் புறவிதழான் மூடப்பட்ட மலரைக் கெட மிதித்துச் செல்லாநின்ற; வளப்பத்தையுடைய கரிய கழி பொருந்திய நிரம்பிய கடல்நீரையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு; யாம் மனமொத்து இதுகாறும் அவனிட்ட தொழிலைக் கேட்டு அதன்படி நடந்தோமேயில்லை; அங்ஙனமாக என்னை நோக்கி "நின் முன் கையில் அணிந்த நெடிய கோற்றொழில் அமைந்த ஒளி பொருந்திய வளைகள் உடையும்படி அச்சேர்ப்பனை அழைத்து அணைத்து முயங்குவாயாக!" என்று கூறி; புலம்பியழுத இவ்வூர்தான்; யாம் இனி அவனுக்கு அமைய நடக்கவல்ல வேறொரு காரியத்தைச் செய்துவிட்டால் என்ன பாடுபடுமோ?
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது. - குன்றியனார்
பாடல் 239. நற்றிணை
அகழ்நானூறு 35
_____________________________________________________
சொற்கீரன்.
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
ஞான்ற பழத்து தீக்குரல் அன்ன
ஞாயிறு தூங்கு குடதிசைக் கூந்தல்
அவள் விழி ஒப்ப கனன்று நோக்கும்.
ஆறு சுரத்த நெடுங்காடு இறந்தோன்
பொருள்வயின் அன்றொரு கற்றைத்திங்கள்
அவளொடு தழீஇய ஒல்லா ஊழின்
அஞ்சுவரு இன்பில் முள்ளின் மூசு
காழ்த்த மரத்திடை ஞாழல் நறுவீ
புல்லிடை ஊரும் பூதங்காற்றில்
கல்லிடை எல்வீழ் கவின் மலி காட்சி
கவிழ்ந்து இமைகள் அவிழ்க்கும்
விழியாள் கீற்றென மின்னல் எறிந்தாள்
அவன் ஒருதனி நீளிடை மறித்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக