சனி, 19 ஜனவரி, 2019

மணல் கூட...

மணல் கூட...
====================================ருத்ரா இ பரமசிவன்
29.01.2017 ல் எழுதியது.




மணல் கூட
ஒரு நாளில் பொன்னாகலாம்
என்றான் கவியரசன் கண்ணதாசன்.
அற்றைச் சில திங்கள்களில்
நம் சென்னை நகரக்கடற்கரை
மணற்துளிகள் ஒவ்வொன்றும்
பகலில் சூரியன்கள் ஆகின.
இரவில் நிலவுகள் ஆகின.
பொன்னையும் விட‌
விலை மதிக்க முடியாத‌
தமிழ்க்குரல்கள் ஆகின!
உரிமைக்கதிர் வீச்சின்
உண்மை ஒளிப்பூக்கள் ஆகின.
கைப்பொறியில் தன்  க‌னவுகளை
விண் முட்டும் வரை சென்று
முட்டித்திரும்பிய‌
புயற்காளைகளின் புறநானூறுகள் கண்டு
புல்லரித்து நின்றோம்.
பதிலைக் கூட எதிர்பாராமல்
வெறும் அஞ்சல் அனுப்பி
மாமூல் கடன் கழித்த நம்
மாநில அரசு செயல் வீரம் காட்டியதும்
கண்டோம்.களித்தோம்.
அது வெறும்
திருப்புமுனையா?
இல்லை
நெருப்பு முனையா?
ஆனால்
அது நம் தமிழின்
கரு உயிர்ப்பு முனை!
என்ன இது?
பலப் பல ஆயிரம் ஆண்டுகள்
தொன்மை கொண்ட தமிழ்
இப்போது தான்
குவா குவா என்று
குறுந்தொகையும் கலித்தொகையும்
ஒலிக்கின்றதா?
இது கேள்வி அல்ல.
ஒரு வெடிப்பின் திரிமுனை.
நம் வரலாறு நீர்த்துப்போனதாக‌
தூர்த்துப்போனதாக‌
நம் அறிவின் நிறம் மாறிவிட்ட‌
நிகழ்வுகளின் தளும்பல் முனை இது.
ஆம்..
மீண்டுமாவது
நம் தமிழ் தளிர்த்து தான் ஆகவேண்டும்!
நம் மாண்பு உயிர்த்து தான் ஆகவேண்டும்!

=================================================
ஒரு மீள்பதிவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக