வியாழன், 10 ஜனவரி, 2019

நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
==========================================================ருத்ரா


"ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை"
என்று எழுதிய கண்ணதாசனின்
அடுத்த வரி தான் அது!

கடவுளைத்தேடி
எழுதாத ஸ்லோகங்கள் இல்லை.
லட்சம் லட்சமாய்
ஆத்மா வென்றும்
பிரம்மம் என்றும்
ஓம் என்றும்
அதன்
அகர உகர மகர‌
முத்தோல்கள் உரித்து
துரீயம் எனும்
நான்காவது படலத்தையும்
துளைத்துப்பார்த்தாயிற்று.
அப்புறமும்
அந்த வெங்காயத்தோல் சுரங்கம்
"வெறும்"காயத்தை தானே காட்டுகிறது.
ஆகாயத்தையே
நூலாக்கி ஏணியாக்கி
ஏறிப்பார்த்தாயிற்று.
ஒரு கடவுளின் அடிமுடி தேடிப்போய்
இரு கடவுள்களும்
ஏமாந்து அலுத்தது தான் மிச்சம்.
இந்த விரக்தியில்
ஒருவன் நாத்திகன் ஆனால்
அதற்காக அந்த கடவுள்
"ஐயோ நம் பக்தன்
நம்மை விட்டுப்போய்விடுவானோ?"
என்று பயமடைந்து
எதிரே வந்து காட்சியளிக்கப்போவதில்லை.
தன் பின்னால் விழும் நிழலை
நோக்கி
ஒருவன் முன்னால் முன்னால்
தேடிக்கொண்டு போவது போல் தானே இது?
அறிவு அறிவைத் தேடுவதே
பேரரறிவு!
மெய்யறிவு!
அறிவு அறிவைக்கொண்டு அறிவைத்தேடும்
முயற்சியே மனித முயற்சி.
பயம் திகில் பக்தி  வியப்பு இன்பம் துன்பம்
இவற்றைக்கொண்டு
எதைத்தேடுகிறோம் என்ற‌
அறிவும் இல்லாமல்
எதையோ தேடி தேடி
கண்ணீர் பெருக்கி
காதலால் கசிந்துருகி
என்ன பயன்?
ஆத்திகம் நாத்திகம்
இரண்டும்
ஒன்றுக்கொன்று
மாற்றிக்கொள்ளும்
முகமூடிகள் அல்ல!
ஒன்று
இன்னொன்றுக்கு
எதிரானது அல்ல.
கடவுளைத் தேடுவது
ஒரு விளையாட்டு என்றால்
கடவுள் என்று இல்லாத
இன்னொன்றைத்தேடுவதும்
ஒரு விளையாட்டே.
இயற்பியல் கணிதவியலின்
கனமான சூத்திரங்களைக்கொண்டு
அறிவின் பிழியல் ஒன்றை
முயற்சிக்கும் மனிதன்
தன் சிந்தனைப்பாதையில்
முன்னேறுகின்றான்.
அவனுக்கு லட்சியம் கடவுள் அல்ல.
இருப்பதையும் இல்லாததையும்
சேர்த்து தேடுவது மட்டுமே
அவன் லட்சியம்!
ஏன்? ஏன்? ஏன்?...
என்ற கேள்விகளின் பின் செல்பவன்
நாத்திகன்.
கையில் சுண்டல் இருக்கிறது.
ஆம்.இதுவே போதும்.
ஆம் ..ஆம்..ஆம்
என்று ஒரு வேலியைக்கொண்டு
தன்னை இருளாய்ச் சுற்றிக்கொள்பவன்
அல்லது
அந்த வேலியாக சுற்றிக்கொண்டிருப்பவன்
ஆத்திகன்.
கள்ளிக்குப் போட்ட முள்ளின் வேலி இது!
இருட்டின் வேலியை எல்லாம் உடைக்கும்
அறிவின் ஒளி அது!

============================================================


============================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக