திங்கள், 7 ஜனவரி, 2019

"இப்படிக்கு உன்..."


"இப்படிக்கு உன்..."
==========================================ருத்ரா

என்ன அடைமொழியுடன்
அவளுக்கு எழுதும் இந்த‌
முதல் கடிதத்தை
முடிப்பது?
உள்ளே ஒரு காதல்குருவி
கத்தியது.
"முடிப்பதா?
முட்டாள்.
காதலுக்கு முடிவே இல்லை.
ஒரு முற்றுப்புள்ளி வைத்து
சொற்களைக்கொண்டு
கல்லறை கட்டி விடாதே"
அந்த குருவி கொத்தி கொத்தி
என் இதயம் சல்லடையாகி விட்டது.
மீண்டும் குருவி குறு குறுத்தது.
"அது உன் இதயமா?
யார் இதயம் யார் இதயத்தில்
துடித்துக்கொன்டிருக்கிறது தெரியுமா?"
குருவியா? குருவா?
தெரியவில்லை.
நூற்றுக்கணக்காய்
காகிதங்கள் கசக்கி எறியப்பட்டு
காலடியில் இடறுகின்றன.
கடிதங்கள் முற்றுப்பெறாத
கடல் அலைகளாய் என்னை
விழுங்கிக்கொண்டிருக்கின்றன!

==============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக