ஞாயிறு, 27 ஜனவரி, 2019

சோம்பல் முறிப்பு

சோம்பல் முறிப்பு
===============================================ருத்ரா

கைகளை உயர்த்தி
நெட்டி முறித்துக்கொண்டேன்.
என் சோம்பேறித்தனத்தை
என் உடல் மொழி
மொழி பெயர்த்துச்சொன்னது.
என்னத்தை செய்வது?
கொஞ்சம் படித்தேன்.
அந்த வரிகள் தையல்மிஷின்
ஊசி மாதிரி
சொற்களை
தைத்துக்கொண்டே போனது.
அதன் வழியே சென்று
ஒரு காதலனும் காதலியும்
கற்றைப்புல் மேட்டில் உட்கார்ந்து
வானத்து ஒற்றையான அந்த பருத்த‌
நட்சத்திரத்தையே லுக் விட்டு
ஏதேதோ உரையாடியதன்
வார்த்தை உராய்வுகளில்
நானும் சிக்கி ரத்த சிராய்ப்புடன்
போதும்
என்று புத்தகம் மூடினேன்.
டிவியில்
சீரியல் என்ற பெயரில்
அவியல் காட்சிகள்
தோன்றி தோன்றி போய்க்கொண்டிருந்தன.
ஒரு ஆட்டோ டாணா டாணாவாய்
பல தெருக்கள் வழியே
பச்சைமரங்களின் நிழல்கள்
அந்த ஆட்டோவின் கண்ணாடிகளில்
பிம்பங்களை
எச்சம் இட்டுக்கொண்டே
சென்று கொண்டிருந்தது.
அந்தக்காட்சிக்கு மையமும் இல்லை
விளிம்புகளும் இல்லை.
அடுத்த விளம்பரத்தை தழுவிக்கொள்ள‌
தடவி தடவி நகர்ந்து கொண்டிருந்தது.

டிவியை கிளிக்கிவிட்டு
சமாதி கட்டியதில்
அந்த மௌனம் கிடைத்தது.
அந்த துல்லியத்தில்
பல்லியின் வலிப்பு சத்தம் கூட‌
காது மடல்களை நிமிண்டியது.

என்ன செய்ய?
சோம்பல் முறித்ததில்
ஒரு சுகம் கிடைத்தது.
அப்படியே ஈசிச்சேரில்
சாய்ந்து எதிரே தெரியும்
கடிகாரத்தின்
பெண்டுல அசைவைப்பார்த்து
அதில் கொஞ்சம் கரைந்தேன்.
எந்த அமிலத்தைக்கொண்டு
இந்த காலத்தை கரைத்து
வைப்பது?
காலம் "காலம் ஆவதே"
அந்த அமிலம்!

இந்தக்காலத்துக்கு
இப்படி நெட்டி முறித்து
சோம்பல் முறிக்கத்தெரியாதா?

வெளியே சென்றிருந்த‌
அம்மா பர பரப்பாக
அம்மா ஓடிவந்தாள்

"என்னம்மா? என்ன விஷயம்?"

"தெருக்கோடி
சுப்பு மாமா இறந்திட்டாராம்."

சொல்லிக்கொண்டே அம்மா
கிளம்பி விட்டாள்.

நானும்
என் பனியன் மீது
சட்டையை மாட்டிக்கொண்டு
அங்கே கிளம்பி விட்டேன்.

இதுவும் ஒரு வகை
சோம்பல்முறிப்பு தான்.
காலம்
இப்போது
அந்த மாமாவின் மீது
சோம்பல் முறித்துக்கொண்டது.

================================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக