சனி, 19 ஜனவரி, 2019

"பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்."

"பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்."
=============================================ருத்ரா

ஐம்பெரும்பூதம் தெரியும்
ஆறாவது பூதம்
தெரியுமா?

இந்த பூதங்கள்
ஒன்றை ஒன்று காதலிப்பதே
ஆறாவது பூதம்.
நீருக்கு
நெருப்பின் மேல் காதல்.
நெருப்புக்கு
காற்றின் மேல் காதல்.
காற்றுக்கு அதன்
வெளியிடையே காதல்.
வெளியும் மண்ணும்
பிசைந்து கிடப்ப்தே காதல்.

ஜி யூ டி எனும்
இந்த பெருங்காதல் மீது தான்
(க்ராண்ட் யுனிஃபிகேஷன் தியரி
எனும் "பேரொன்றியக் கோட்பாடு)
விஞ்ஞானிகளுக்கும் காதல்.
மெய்ஞானிகளையும்
இந்த காதல் பூதம்
படுத்தும் பாடு
கொஞ்ச நஞ்சமல்ல.

"காதலாகி கசிந்துருகி"தான்
அதை நினைத்துப்பாடுகிறார்கள்.
நீயும் நானும் ஒன்று தான்
என்று அத்வைதம் சொல்கிறார்கள்.
சிற்றின்பத்துக்கும்
பேரின்பத்துக்கும்
இடையே
இவர்கள் கிழித்திருக்கும் கோடு
ஒவ்வொரு "ஜன்மத்தின்"கன்னிக்குடம்
உடையும் போதும்
ஓவ்வொரு "மரணத்தின்"கொள்ளிக்குடம்
உடையும் போதும்
கிழிந்து போகிறது.

"பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்.
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்."
ஆம்.
உண்மை தான்.
அவள் "சிரிப்பில்"
நான் மறைந்து போகிறேன்.
என் "சிரிப்பில்"
அவள் மறைந்து போகிறாள்.

===================================================
21.06.2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக