திங்கள், 14 ஜனவரி, 2019

கண்ணாடி சில்லுகள்

கண்ணாடி சில்லுகள்
==============================================ருத்ரா

உடை தரிக்கும் முன்
கண்ணாடி பார்த்தேன்.
நான் உன்னிப்பாக‌
கண்ணாடி பார்ப்பது
மழித்தலின் போது
மட்டும் தான்.
இன்று ஏன் பார்க்கிறேன்
எனககே தெரியவில்லை.
நீயும் உன் முகரையும்
என்று
முகத்தில் ஓங்கி
ஒரு குத்து விடாத ஜீவன்
இந்த கண்ணாடி மட்டும் தானே.
பல தடவை
நான் என் முகத்தின்
எட்டு கோணல்கள் காட்டி
உதடு பிதுக்கியும்
கண்களை உருட்டியும்
இதை
என்ன பாடு படுத்தியிருப்பேன்.
எப்படியெல்லாம்
பொறுத்துக்கொண்டது.
என் பிம்பம்
அதில் ஒட்டிக்கொண்டு
என்னையே
கிச்சு கிச்சு மூட்டியது போல்
எத்தனை விளையாட்டுகள்
அதனிடம்.
இன்னும் ஒரு நாள் தானே.
காத்திருப்போம்.
பிம்பம் பார்க்க‌
இன்னொரு பிம்பம்
வந்துவிடுமாமே.
இப்படித்தான் சொன்னான்
கவிதையாக‌
என் நண்பன் சொன்னான்
ஒரு "மனைவி" என்பவளைப்பற்றி.
கண்ணாடி பார்ப்பது போல்
பார்த்துக்கொண்டே இருக்கலாமா?
எனக்கு ஆவல்
கட்டுக்கடங்கவில்லை.
பெண்ணை நான் பார்க்கவில்லை.
இன்று காலை தான்
இங்கு வந்து சேர்ந்தேன்.
அன்று மாலையே ரிஸப்ஷன்.
பெண்ணின் முகம் ஏறிட்டேன்.
திடுக்கிட்டேன்.
அதிர்ச்சியுற்றேன்.
ஒரு
அமாவாசை முகம் பார்க்க‌
ஒரு
பௌர்ணமியையா
எதிரே நிறுத்துவார்கள்?
என் பிம்பத்தை
அவள் பிம்பத்தில் பார்ப்பதா?
ஆயிரம் மடங்கு
அழகிய பிம்பம்
அவளுடையது.

ஒரு வழியாய்
மறுநாள் காலை
மாப்பிள்ளை அலங்காரத்துடன்
கண்ணாடியின் முன் போய் நின்றேன்.
என் பிம்பங்களை வைத்து
எத்தனை முறை
எப்படியெல்லாம்
அதை வதம் செய்திருப்பேன்.
எனக்குள் கோபம் கொளுந்துவிட்டது.
நரம்புக்குள்
சூரியனின் கொரானவே
கொப்புளித்து விட்டது.
ஓங்கி குத்துவிட்டேன்
கண்ணாடியில்
என் முகத்தின் மீது..
கண்ணாடியின் சார்பாக‌
என்னை பழி வாங்க..
பிம்பம் சில்லு சில்லுகளாய்
தெரித்தது..
கைவிரல் முட்டியெல்லாம் ரத்தம்.
கீழே... கீழே....
கெட்டி மேளத்துக்கு
காத்திருக்கும் கூட்டம்.
திமு திமு என்று வந்து விட்டது.
எல்லாவற்றையும்
துடைத்து வழித்துப்போட்டு விட்டார்கள்.
"மாங்கல்யம் தந்துனானே"
மந்திரமும் துவங்கிவிட்டது.
பெண் வீட்டுக்காரர்
ஒருவர் பெருமையாய்
பீற்றிக்கொண்டார்..
கை நிறைய சம்பாதிப்பவனாம் நான்.
இருட்டுப்பிண்டத்தின் கையில் தாலி.
எனக்காக ஒரு நிலவு
சிரித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தது.

================================================
25.11.2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக