ஞாயிறு, 20 ஜனவரி, 2019

மனிதன்

மனிதன்
=================================ருத்ரா

எனக்குத்தெரியாது என்று
தெரியாது.
எனக்கு தெரியாது என்று
தெரியும்.
எனக்கு தெரியும் என்று
தெரியாது.
எனக்குத் தெரியும் என்று
தெரியும்.
அறிவின் நான்கு நிலைகள் பற்றி
அறிஞர்களின் கருத்து.
நான்காவது நிலையே
ஆன்றோர் நிலை.
முதல் நிலையே
பிள்ளைநிலை.
மனிதனின் குறுக்குவெட்டுத்தோற்றம்
மூளையைப் பற்றியது அல்ல.
உணர்வைப்பற்றியது.
கல்லும் புழுவும்
சமன்பாட்டுக்குள் வராது.
புல்லும் புழுவும்
சமன் செய்து சீர் தூக்கலாம்.
உயிர் தான் அங்கு இணைப்பிழை.
இன்னும்
மனிதர்கள்
மண்ணுக்குள்ளிருந்தும்
கல்லுக்குள்ளிருந்தும்
விழித்து எழுந்த பாடில்லை.
சதை கிழிக்கும் கோரைப்பல்லோடு தான்
அவன் தூக்கம் கலைத்தான்.
அவன் இமைகள் உயர்ந்த போது
"கல்லைக்"கொண்டு தான்
"கல்"வி கற்றான்.
கல்லோடு கல்லை உரசி
அவன் கண்டதே
அவனது முதல் "அகர முதல".
அந்த "தீ"யின் வெளிச்சம்
அவனை குகையிலிருந்து
வெளிவரச்செய்து
"நகர்"கள் அமைக்க
"நகர்தல்"தொடங்கினான் .
வாயின் மாமிச நாற்றம் நின்றபோது
சொல்லைக்கற்றான்.
படிப்படியாய்
அவனுக்கே அவன் கடவுள் ஆனான்.
புரியாதவர்கள்
கல்லின் முன் நிற்கிறார்கள்.
புரிந்தவர்கள்
தந்திரம் செய்தார்கள்.
மனிதன் மனிதனை தின்ன ஆரம்பித்தான்.
நச்சு வட்டம் சுழல்கிறது.

==============================================
19.09.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக