செவ்வாய், 15 ஜனவரி, 2019

"மாதொருபாகன்"

"மாதொருபாகன்"
=============================================ருத்ரா
ஒரு மீள்பதிவு  /08.07.2016ல் எழுதியது.


மாதொருபாகன் ஒரு நாவல் அல்ல.
நாம் யுகம் யுகமாய்
முகம் பார்த்த கண்ணாடி.
அதிசயமான ரசம் பூசிய கண்ணாடி.
அழகு முகம் காட்டும்போதே
அதன் அடியில் காட்டும்
நம் ஆபாசம்.
அழகு முகம் தெரிந்தபோது
நாமம் தீற்றினோம்.
விபூதியும் இட்டோம்.
அதில் நம் வக்கிரம் தெரிந்தபோது
பிம்பத்தை
அடித்து நொறுக்கினோம்.
கண்ணாடி நொறுங்கும்.
பிம்பம் நொறுங்குமா?

மலடி என்ற சொல்லே இங்கு நோயாகி...
மனித மனத்தின் வக்கிரங்களில்
அவன் ஆத்மாவை படுகொலை செய்து...
அந்த பட்டாக்கத்தி மீண்டும் நீண்டு
பெண்மையின் உண்மையை கசாப்பு செய்து..
கருவறுக்க வந்தது பற்றிய‌
நிகழ்ச்சிகளின் நிழலே அல்லது
நிழல் காட்டும் நிகழ்ச்சிகளே
"மாதொருபாகன்."

பெண்மலடு மட்டும் பெருந்தீயாகி
பெண்ணையே எரிக்கும்.
குந்திக்கு தெரிந்த அக்கினிமந்திரம்
குப்பத்து பெண்ணுக்கு
தெரியவில்லை என்றால்
குடிசையோடு அவள் எரிவாள்.
புராணங்களா?
புற்று நோய்க்கிடங்குகளா?
சமுதாயமே இந்த மனமுறிவில் முற்றி
சங்கிலியில் கிடக்கிறது.
மூளிச்சமுதாயத்துக்கு
அறிவின் தீ மூட்ட வந்தது
"மாதொரு பாகன்"

ஆண் மலடோ இங்கு புனிதம் ஆகி
இதிகாசமும் கூட ஆகிவிடலாம்.
இறைமை என்பது இரண்டல்ல ஒன்றே
என்று
அத்வைதம் சொன்ன‌ வாய் கூட‌
"நாரியே நரக வாயில்"
என்று கூசாமல் சொன்னது.
அன்னைக்கு
எந்திரம் தந்த ஸ்லோகங்கள்
அவள் கருப்பையே
தீட்டுகளின் பாவக்கடல் என்றன.

பெண்ணின் கண்ணியம்
சல்லடைக்கண்ணாய் துளைக்கப்படவோ
இங்கு பாஷ்யங்கள் செய்தனர்?
"மாதொருபாகன்"
இந்த ஆணாதிக்க காக்காய்வலிப்பு நரம்புகளை
நிமிர்த்தி முறுக்கி மருத்துவம் செய்து
மானுட அநியாயங்களை
மனசாட்சி எனும் தராசுமுள்ளின்
கழுவில் ஏற்றி தீர்ப்பு சொன்னது.

இதை வெறும் கட்டப்பஞ்சாயத்து ஆக்கி
சாதியும் மதமும் சாணை தீட்டிய‌
கொடுவாளின் கைப்பிடி
அரசின் கையில் எப்படி விழுந்தது?
ஓட்டுவங்கிகளுக்கு மட்டும்
தூண்டில் போடும்
அந்த கட்சிகளுக்கே வெளிச்சம்.

முருகனும் கணேசனும்
பார்வதி வயிற்றில் பிறக்கவில்லையே.
இருப்பினும்
தான் பாதி அவள் பாதி
என்று
காட்டினானே அந்த‌ "மாதொரு பாகன்."
இவர்கள் மட்டும்
பொன்னாத்தாக்களை இந்த‌
அவலப்புழுதியில் புரளவிட்டது
ஏன் என்று
பேனாவையே ஒரு திரிசூலமாக்கி
எழுதிக்காட்டியது
இந்த "மாதொருபாகன்!"
என்னும் எழுத்துப்புயல்.

==============================================

2 கருத்துகள்:

வருண் சொன்னது…

***முருகனும் கணேசனும்
பார்வதி வயிற்றில் பிறக்கவில்லையே.**

முருகன் கணேசன் எல்லாம் கட்டுக்கதை கதாநாயகர்கள் னு இன்னும் புரியலைனா கஷ்டம்தான்.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

புரியாத சுகமே புராணங்களாய் இவர்களிடையே
புரண்டுகொண்டிருப்பதால் தான் அறிவு வெளிச்சம் அற்ற‌
இருட்டில் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

கருத்துரையிடுக