சனி, 26 ஜனவரி, 2019

தேசப்பிதாவே!

தேசப்பிதாவே!
====================================================ருத்ரா

தேசப்பிதாவே!
இந்த தலைமுறைகள்
மனப்படங்களில்
ஒரு பொக்கைவாய்ப்புன்னகை என்று
உன்னை ரூபாய் நோட்டுகளின்
ஸ்பரிசத்தில் வாசனை பிடித்தபோதும்
நம் மூவர்ணக்கொடியின் நிழலில்
உன் இதய நரம்புகள்
இன்னும்
இராட்டை சுழற்றிக்கொண்டிருப்பதையும்
அவர்கள் அறிவார்கள்.
குத்துக்கு குத்து
வெட்டுக்கு வெட்டு
என்றும்
ஒரு ப்ளஸுக்கு ஒரு மைனஸ் என்றும்
சமுதாய டைனாமிக்ஸ்ன் கணிதம்
சமன்பாடு காண வெறியுடன்
முனைந்திருந்தால்
இந்நேரம் இந்தியா முழுவதும்
ஒரு சுடுகாடாக சாம்பல் மேடு இட்டிருக்குமே!
ஆம்..
கண்ணுக்குத்தெரியாத‌
அந்த "அஹிம்சை"ச்சக்தியின்...
வண்ணமாய் இராவிட்டாலும்
வலுவான
அந்த மூக்குக்கண்ணாடியுடன் கூடிய‌
அந்த கார்ட்டூன் சித்திரத்தின்......
கோட்டுச்சித்திரமே
நம் ஓட்டுச்சித்திரம்.
நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிற‌
வன்கொடுமையும்
கருப்புப்பண லஞ்சப்பேய் ஆட்டங்களும்
நமக்கு பழகிப்போனதால் தான்
உயிருக்கு உயிர் பறிக்கும்
விளிம்பு நிலைப் பேரழிவு
இந்த மண்ணில் நிழலாடவில்லை.
பழகித்தான் போய் இருக்கிறது.
மரத்துப்போகவில்லை.
அதனால் சீற்றங்களையும் சீர்தூக்கி
காந்திய சிந்தனையின் சுவடுகளை
மௌன ஆயுதமாய் மனக்கிடங்கில்
வைத்துக்கொண்டிருக்கிறோம்!
உலகப்பட சித்திரங்களைப்பார்த்தால்
தெரியும்
அண்ணல் காந்தியடிகள் என்னும்
எனும் ஒரு அமானுஷ்ய உணர்வு
நம்மை எப்படி
அண்டை கொடுத்து
காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.
என்று!
அந்த கொடூரங்களின் நசுங்கல்கள்
கோடானு கோடி இந்தியர்களை
சமுதாயத்தின் முரட்டு பற்சக்கரங்களில்
கூழாக்காமல் தடுத்துக்கொண்டிருப்பது
அதோ அந்தக் குரல்கள் தான்.
"ஈஸ்வர அல்லா தேரே நாம்"
சப்கோ சன்மதி தே பகவான்.."
காந்தியடிகள் எனும்
அந்த கோவர்த்தன கிரியை
நம் கோடி கோடி விரல்கள்
இன்னும் பாதுகாப்பாய்
தூக்கிப்பிடிக்கட்டும்.
அண்ணலே உன் பெயர் மட்டுமே
இந்த நாட்டில்
மொழி புரியாமல் வெறும்
ஒலிப்பாக இல்லாத‌
உயிர்ப்பு மந்திரம்.
வாழ்க நீ எம்மான்
இந்த வையத்தையெல்லாம்
வாழ்விக்க வந்த ஒளியே!
வாழ்க வாழ்கவே!

========================================================
27.09.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக