வெள்ளி, 25 ஜனவரி, 2019

காகிதம் தாண்டிய வெளி....

காகிதம் தாண்டிய வெளி....
==============================================ருத்ரா

எழுத்து 

காகிதம் தாண்டிய வெளியில்
என் பேனாவின்
ஏவுகணைகள்...


அந்தி

சூரியன் குளித்துவிட்டு
வானத்து டவலைக்கொண்டு
தலை துவட்டிக்கொள்கிறான்.


மீன்கொத்தி

தண்ணீர்ப்பளிங்கில்
எழுதுகிறது
ஒரு குத்துப்பாட்டு.


கஜாப்புயல்

குடிகாரக்கணவன்
மனைவியின் கூந்தலைப்பிடித்து
விசிறியடிக்கும் கார்ட்டுனை
வரைந்தன தென்னைமரங்கள்.


தேர்தல்

காக்கை கல் போட்டது
அந்த கொஞ்சம் தண்ணீருக்கு.
வாக்காளர்கள் ஓட்டு போடுவது
கானல் நீருக்கு.

வறுமைக்கோடு

"நூல்"பிடித்து
அளந்து விட்டார்கள்
எட்டு லட்சம் என்று.

ஸ்டெர்லைட்

சாப்பிடும் தட்டை
ஓட்டை போட்டுக்கொண்டு
வரும் பூதத்திற்கு
சூடம் காட்டி பூஜை நடக்கிறது.


செல்ஃபோன்

தகவல் சுரங்கத்துள்
பூமிக்கு கட்டினார்கள்
கல்லறை.

காதல்

சமுதாயம் எரிகின்றபோது
பட்டாம்பூச்சி சிறகுகளோடு
விளையாட்டு.

கவிதை

எழுத்துக்களைக்கொண்டு
எரிமலையை வடிகட்டும்
செப்பு விளையாட்டு.

புதுக்கவிதை.

மேலே தெரிகின்ற வானத்தை
தேடி
மண்ணுக்குள் தோண்டுவது.

==============================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக