வெள்ளி, 4 ஜனவரி, 2019

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி
=============================================ருத்ரா

மக்களைக் கவர்ந்தவர்களில்
யாரேனும் ஒருவர் இறந்தால்
இந்தக்கண்ணீர் அஞ்சலிகள்
உலா வரும்.
ஊடகங்களில்
சுவரொட்டிகளில்
இன்னும்
மௌனம் காக்கும்
பொதுக்கூட்டமாய்
இறுகிய மௌனத்தில்
நீள நடக்கும் பேரணிகளாய்..
இது வெளிப்படும்.
இமயம் சரிந்தது
என்ற போஸ்டர்களை
கணக்கு எடுத்தால்
இது வரை சாய்ந்து கிடக்கும்
ஆயிரக்கணக்கான இமயங்களை
தூக்கி
நிமிர்த்தவேண்டியிருக்கும்.
இருப்பினும்
அன்னார் இழப்பில் ஏற்பட்ட‌
சூன்யம்
அல்லது வெறுமை தான்
அப்படிப்பட்ட காற்றுக்குமிழியை
சோகத்தின் பிரம்மாண்ட பலூனாய்
ஊதுகிறது.
லட்சக்கணக்காய் மக்கள்
கொத்து கொத்துகளாய்
சிதறி பதறி ஓடுவது
நாம் காணும் பிரிவுத்துயரத்தின்
சமுதாயம் பிம்பம் தான்.
அந்த மக்கள் கூட்டம்
ஈசல்களா?
விட்டில்களா?
தெரியவில்லை.
கோடிக்கணக்காய்
அந்த ஈசல்கள் அல்லது விட்டில்கள்
வரிசையில் நின்று
ஒரு கணிப்பொறியின்
பட்டன் தட்டி தட்டி
பார்த்தும் அடைந்த அந்த
வெறுமை அல்லது இழப்புக்கு
என்றைக்கு கண்ணீர் அஞ்சலி நடத்தும்?
ஏனெனில்
ஒவ்வொரு தடவையும்
தேர்தல் பிழைத்து விடுகிறது.
ஆனால்
ஜனநாயகம் இறந்து விடுகிறது!
இதற்கு அந்தக்
கண்ணீர்
அஞ்சலி செலுத்துவதைவிட‌
அது எரிநீராய்
கொப்பளித்து தன்
கனவின் கனல்
பரிமாணத்தை இன்னும் ஒரு
பரிணாமத்துக்கு
உயர்த்தவேண்டியதே
பொறுத்தமான அஞ்சலி!

==================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக