செவ்வாய், 1 ஜனவரி, 2019

புத்தாண்டு புல்லரிப்புகள்

புத்தாண்டு புல்லரிப்புகள்
==============================================ருத்ரா

நம்பிக்கை என்பதே
புதிய ஆண்டின் முதல் தேதி.
சென்ற ஆண்டின் கடைசி தேதி
அவலங்களின் கூரிய முனைகளால்
கந்தல் ஆகிப்போனது.
புதிய வானத்தின்
புதிய பறவைகளுக்கு எல்லாம்
புதிய ரெக்கைகள் எடுத்து
தைக்க கொடுத்து அணிய வைத்து
அழகு பார்க்கும்
உற்சாகம்
இந்த பிரபஞ்சம் எல்லாம்
நெசவு செய்யப்பட்டிருக்கும்
பொன்னான நாள் இந்நாள்.
இந்த புத்தாண்டு
இதழ் அவிழ்த்து
நமக்கு
ஹலோ சொல்லும்போது
அதன் சூரிய வாசனையில்
நம் முரண்கள் எல்லாம்
எங்கோ பரண்களுக்குள்
வீசி எறியப்படுகின்றன.
ஆண் பெண் வசீகரத்தின்
மின்காந்த வீச்சில்
கண்ணொடு கண்ணோக்கி
கலந்த உள்ளங்கள்
இது வரை
ஹாய் களை மட்டுமே
எந்திரத்தனமாய் பரிமாறிக்கொண்டிருந்தது
திடீரென்று
வண்ணத்துப்பூச்சிகளின்
சிறகுகளாய் மாறி
காதல் ஓவியம் தீட்டிக்க்கொண்டன.
இருப்பினும்
கிழித்தெறியப்பட்ட காலண்டர் தாள்கள்
அனைத்தும்
நம் பொக்கிஷங்கள்.
நம் கனவுகள் ஆசைகள் ஏக்கங்கள்
கவலைகள் அவலங்கள் அவமானங்கள்
எல்லாமாய்ச் சேர்ந்து அவற்றை
கை துடைக்கும் பேப்பர் ஆக்கிவிட்டு
நம் மீது எறிந்த குப்பைகளில் தான்
இந்த புதிய ரோஜாக்களை
நட்டு வைக்கிறோம்.
மாற்றங்கள்
நம்மை கூழாக்கி மிதித்து
நடைபோடுவது
நமக்கே தெரிவதில்லை.
வரலாற்றுப்புத்தகத்தின்
தடிமானான‌
பக்கங்களுக்கு இடையில்
நசுங்கி ஃபாசில்கள் ஆகிப்போன‌
கரப்பான் பூச்சிகளாய்
உறைந்து கிடக்கின்றோம்.
அதிலும் கொஞ்சம்
உயிர் துளிர்த்து அந்த
நீள மீசைக்கோடுகள்
சிலிர்த்துக்கொள்ளும்
புல்லரிப்புகளே நம் புத்தாண்டுகள்.

======================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக