வெள்ளி, 4 ஜனவரி, 2019

அது என் நீண்டவாக்கியம்....

அது என் நீண்டவாக்கியம்....
===============================================ருத்ரா


அந்த நீண்ட வாக்கியம் எனக்கு சுகமாக இருக்கிறது.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப்பற்றி
இந்த தூசு துரும்புகள் கவலைப்பட்டுக்கொண்டதில்லை.
பிரமிடுவின் ஒரு மாடாக்குழியில் ஆந்தைப்படத்துடன்
ஒரு ஆத்மா நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்
ரத்தம் கசிந்ததை சித்திரசங்கிலியில் எழுதியிருப்பதை
சிலாகித்து கிளர்வு கொண்டு
அந்த நீண்ட வாக்கிய மலைப்பாம்பை நெளியவிட்டிருப்பேன்.
இல்லாவிட்டால்
ஹோமரின் ஒடிஸியில் அந்த அற்புத தீவும்
போதைப்பழம் உண்ணும் (லோட்ட்ஸ் ஈட்டர்ஸ்) மனிதர்களும்
பற்றியும் கூட்ஸ் ஓட்டியிருப்பேன்.
எனக்கு அது பரமசுகம்.
இல்லாவிட்டால்
பிரச்னோபனிஷத் பிப்பிலாதன் நம் தமிழ்க்கவிஞன் கபிலன் தான்
என நீண்ட வாக்கியங்களுக்குள்
ஒரு உலகத்தமிழ் மாநாடு கூட்டியிருப்பேன்.
இல்லாவிட்டால்
காதல் எனும் சில்லாட்டை வழியே பதனி இறக்கி
சுண்ணாம்பு தடவாத நறவை கலயங்களில் பெய்து
அந்த வாக்கியம் பூராவையும் நனைத்து பிழிந்து கொண்டிருப்பேன்.
அவனும் அவளும் செல்ஃபோன்களின்
பூனைக்கண்களை அழுத்தி அழுத்தி
எலி பிடிக்கும் விளையாட்டை
வளையல் கிலுகிலுப்புகளில்
சதை புடைத்த ஆண்புஜ வருடல்களில்
எழுத்துக்களால் வழிந்தோடச்செய்த‌
அந்த நீண்டவாக்கியத்தை
ஒரு சீன ஓட்டலில் பாம்பு உரித்து தட்டில் வைத்து தருவதுபோல்
பரிமாறிக்கொண்டிருப்பேன்.
சங்ககாலப்புலவன் போல ஒரு "செம்பரணன்"என்ற பெயரை
ஓலையில் நீளமாய் கீறியிருப்பேன்....ஆனால்
நமக்கோ தமிழ் என்றால்
நமைச்சலும் அரிப்பும் பாடாய் படுத்தும் என்பதால்
"மாளவிக்காக்னி மித்ரன்"என்று பெயர் சூட்டி
என் வாக்கியத்தின் நீளப்பட்டியல் கல்லை கிடத்தியிருக்கிறேன்.
ஞான பீடங்கள் இமைஉயர்த்தலாம்.
அகாடெமிகள் விருதுக்காக‌ என்னைப்புரட்டிப்பார்த்து அச்சு கோக்கலாம்.
என் படுக்கையை உதறி தூசி தட்டி விரித்துவிட்டேன் படுத்துக்கொள்ள.
ஆம்..அது
என் நீண்ட வாக்கியம்...
எழுத்துக்களின் ஏக்கத்தின் பெயர்
விருது.
அது ஒரு கல்லறைக்குள்
புதைந்து கிடக்கிறது.

=====================================================
07.12.2014


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக