சனி, 5 ஜனவரி, 2019

ஊசியிலைக்காடுகள்


ஊசியிலைக்காடுகள்
_____________________________________ருத்ரா இ பரமசிவன்
(கவிதைகள்)

புல்லைவிட
அதை ருசித்துத் தின்றன‌
அந்த எருமை மாடுகள்.
தவிடு புண்ணாக்கு கூட‌
அப்புறம் தான்
என்று
கசக்கி கசக்கி தின்றன.
தெருமுனையில்
காகித குப்பைகளாய்க்கிடந்த‌
ஓட்டுக்காகிதங்களை.


‍‍‍‍_______________________________________________1



ஏத்தி விடப்பா!
தூக்கி விடப்ப!
என்று
எகிறி எகிறி வந்த‌
அந்த பக்தர்கள்
திமு திமு என்று
கூழாக்கிச் சென்றனர்.
காயங்களில் கீழே கிடந்தவர்கள்
மணிவயிறு தாங்கிய மங்கையர்கள்.
"மணிகண்டன்"களுக்கு
பிரம்மத்தின் படைப்பு வாசல்கள்
கல்லறைகளாகத்தெரிந்தால்
அந்த மகரஜோதி
இருட்டின் கரும்பிழம்பாகத்தானே
தெரியும்!

___________________________________________________2


நெல்லுமணிகள் எதற்கு?
ஆன் லைனில்
சிலிகான் ரவைகளில்
வைட்டன்மின்களை
பூசி வைத்துக்கொண்டால் போயிற்று.
எதற்கு காளையும் பசுவும்?
எதற்கு தென்னை மரங்கள்?
டெர்மினேட்டில் வருகிற‌
மண்டையோட்டு சிதலங்களில்
சர்க்யூட் சமாச்சாரங்கள்
செயற்கை எச்சில் வடித்து
செயற்கை ரத்தச்சேற்றில்
முடியப்போகும்
நம் கூகிள் வயல்களை
உழுது கொன்டிருப்போம்
வாருங்கள்

_______________________________________________3


திரைக்கதைகள்.
கனல் பொறியும் வசனங்கள்.
ஒற்றை வரித் தீம்கள்.
இவை
நம் சித்திரத்தை மாற்ற‌
நாம் இன்னும் இங்கு
சித்ரவதைகள் அனுபவிக்க‌
வேண்டியுள்ளது.


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________________4


இளைய தலைமுறைகளின்
மூளைக்கபாலம்
கைகளில்
இடம் மாறியது.
எண்கள் ஒளிகசியும்
அந்த செல்பேசிகளில்
உலகக்கோளம்
நசுங்கிக்கிடக்கிறது

‍‍‍‍‍‍___________________________________________________5


இந்த ட்விட்டர்களை
கூட்டிப்பெருக்கி அள்ளினால்
நகராட்சி குப்பைத்தொட்டிகள்
தோறும்
மில்லியன் மில்லியன் மில்லியன்
லைக்குகள்.
முக "நூல்கள்" கொண்டு
திறந்து கிடக்கும்
நம் மானம் மறைக்கும்
ஆடை நெய்ய முடியுமா?


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________________6


ராமன் சிலைக்கும்
இங்கு
பத்து தலைகள்.
அண்ணாந்து பார்க்க முடியாத
உயரத்தில்...
அத்தனையும்
அதிகாரக்குவியல்கள்!


__________________________________________________7


பின் நவீனத்துவம் கொண்டு
ஒரு பட்டம்பூச்சிச்சிறகில்
கவிதை கிறுக்கினேன்.
கையெல்லாம் ரத்தம்.
பட்டாக்கத்தி
அதற்குள் எப்படி வந்தது?


‍‍‍‍‍‍_______________________________________________8


நிலாவைக்காட்டி
அம்மா சோறு ஊட்டினாள்.
குழந்தை
அந்த நிலா சைஸ் இட்லி கேட்டது.
"அப்பல்லோ"வுக்கு
சொல்லியிருக்கிறேன்
என்றாள் தாய்.
அது அமெரிக்காக்காரன்
ஏவி ஏவி விளையாடும்
விண்கோள்.

_____________________________________________9


தட்டாம்பூச்சியின்
கண்ணாடிச்சிறகை
பிய்த்து பிய்த்து
அழகு பார்த்தார்கள்..
கவிதை என்று
எழுதி எழுதிப்பார்த்து.

_____________________________________________10












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக