வெள்ளி, 25 ஜனவரி, 2019

என்ன பார்க்கிறாய் ?




















                                                                                                                                                   ருத்ரா                                                                                                                                               


என்ன பார்க்கிறாய் ?
========================================ருத்ரா


நான் உன்னைப்பார்த்தது போல்
நீயும் பார்க்கிறாயா?
கண்ணின் கருவிழிகள்
ஒரு தேன்பாய்ச்சலாய்
ஒரு மின் பாய்ச்சலை
நம் உள் இழையோட‌
வைத்து வீட்டது.
அதன் நெசவுக்குள் நாம்
இனி நூல்
கோர்த்துக்கொண்டிருப்போம்.
ஆனால் அது ஆடை அல்ல.
மூடிவைத்திருந்த நம்
ஆசைப்பிழம்புகளை
உரித்துப்போட்டு விட்டு விட்டது.
நம் பார்வைகள்.
நம் சொற்கள் எல்லாம்
இனிப்பு தான்.
ஈக்களும் எறும்புகளும் மொய்க்கும்.
அதாவது
சம்பந்தமற்ற‌
சொற்துண்டுகளும்
வாக்கியப்பூச்சிகளும்
சந்திப்புகளின் போது
நம் மீது ஊர்ந்துகொண்டிருக்கும்.
எதற்காக என்று
அவை நம்மிடம்
அர்த்தம் கேட்கும்.
நீண்ட இரவுகளின்
குகைப்பாதையில்
நம் பயணம்.
வெளிச்சத்தின் அந்தப்பக்கமே
தெரியாத பயணம் அது.
பகல்களில் கூட‌
நம் உடம்புக்கூடுகள்
இருட்டின் புழுக்கூடுகளாய்
நெளிந்து கொண்டிருக்கும்.
பாதைக்கு அடையாளம் இல்லை.
கண்ணுக்கு தெரியாத‌
ஊழிக்காலப்பறவையின்
எச்சங்கள்
அங்கே இங்கே தோன்றும்
நம் மைல் கற்கள்.
அருகருகே
தழுவிக்கொள்ளாத குறையாய்
அமர்ந்து
நாம்
பேசிக்கொண்டே இருக்கவேண்டும்
அந்த சொல்லின்
எள்ளுமுனையில் கூட‌
எந்த அரத்தமும் இருக்கப்போவதில்லை.
நம் உயிர் கரைந்து
ஒலிக்கும்
வெறும் இந்த அருவியில்
நம் அர்த்தமற்ற மௌனத்தை
குளிப்பாட்டிக்கொள்வோம்.
காலத்தின் மகரந்தங்கள்
சொட்டு சொட்டாய்
நம் மீது வீழ்ந்து
ஓர் இருண்ட ஆரண்யமாய் அவை
நம்மைப் போர்த்திக்கொள்ள‌
பேசிக்கொண்டே இருப்போம்.
இந்த பிரபஞ்சத்தின்
செவிட்டுக்காதுகள் அதை
கேட்டுக்கொண்டிருக்கட்டும்.

====================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக