திங்கள், 21 ஜனவரி, 2019

மெரீனா

மெரீனா
===========================================ருத்ரா

காதல் என்றால்
அதன் குப்பைத்தொட்டி
மெரீனா.
ஏனெனில்
அங்கே தான்
காதல் கடிதங்கள்
எல்லாம்
"பழைய பேப்பர்" கடைகள்
வழியாய்
சுண்டல் மடிக்க
வந்து விடுகின்றன.
பாருங்கள் அவள் வருவதற்காக
காத்திருக்கும் போது
சாப்பிட வாங்கிய
சுண்டல் பொட்டலத்து
காகிதத்தில்
என் கையெழுத்து.
"அன்புடன்...."
என்று என்னைகாட்டிக்கொடுத்தது.
என் ஒவ்வொரு கடிதமும்
பொக்கிஷம்
என்று சொன்னவளையும்
காட்டிக்கொடுத்தது.
இந்த குப்பைக்காட்டில்
என் கவிதையா?

அவள் வந்தாள்
காட்டினேன்
இங்கே எப்படி வந்தது?
நான் கேட்டேன்.
இங்கே எப்படி வந்தது 
அவளும் கேட்டாள்.
"சரி விடுங்கள்.
எப்படியோ வந்தது.
ஏதோ ஒரு புத்தகத்தில்
வைத்திருந்தேன்.
எடைக்கு போடும்போது
அந்த புத்தகத்தோடு
போயிருக்கலாம்." என்றாள்.
............
"இதயத்துள் இதயம்
விழுந்த பின்
இந்த காகிதங்கள்
எங்கே கிடந்தால் என்ன?"
என்றாள்.
ஆம்
அவை நான் அந்தக்கடித்தில்
எழுதியிருந்த வரிகள்!

=======================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக