திங்கள், 19 மே, 2025

ஏலியன்கள்

 

ஏலியன்கள்

___________________________


அயலாட்கள் என அழைக்கப்படும்

இந்த நீலமான முட்டைக்கண்களும்

நசுங்கிய வட்டவடிவ‌ முகங்களும்

கொண்ட உருவங்கள்

நம்மை ஆக்கிரமிக்க காரணம்

நமது விண்வெளி வாசனைகள் தான்.

நிறைய ஆங்கிலப்படங்கள்

நம்மை கொடிசுற்றிக்கொண்டதில்

நாமும்

அவர்களை கொடி சுற்றிக்கொண்டோம்.

இவர்கள்

காலம் கடந்தவர்கள்.

மில்லியன் மில்லியன்

ஒளியாண்டுகளில் 

இவர்களின் சுவடுகள் தான்.

உண்மையைவிட உண்மையாகத்தோன்றும்

நிகழ்வுகளில் இவர்கள்

நம்மிடம் தினம் தினம் 

சஞ்சரிக்கிறார்கள்.

அதுவும் 

கைபேசி துண்டுப்படங்களிலும்

துணுக்குறுத்தும் காட்சிகளிலும்

வந்து வந்து 

போகிறார்கள்.

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியின்

அந்த விண்வெளிச்சுருள் 

புகை மண்டலங்களில் கூட‌

அந்த கண்கள் 

முன்னே முன்னே வந்து

அச்சுறுத்துகின்றன.

இப்படித்தான்

பாருங்கள்

ஒரு கைபேசிப்படத்தில்

டகா டகாக் காட்சிகள்.

ஒரு மகப்பேறு மருத்துவ மனையில்

ஒரு தாய்க்கு

ரெட்டைக்குழந்தை பிரசவமாம்.

அதே நீல முட்டைக்கண்களுடன்

வெளிர் பச்சை மேனிகளில்...

ஒரு டாக்டர் 

சிரித்துக்கொண்டே சொல்கிறார்

"போஸ்" கொடுத்துக்கொண்டே

ஒரு பேட்டியில்

அந்தத்தாய் பிரசவவலியில் 

கண்ணைமூடிக்கனவில் மயங்கி

இதைக்கண்டாராம்.

அதனால் தான் இந்த 

ஏலியன்களின் "அவதார்".

என்ன செய்வது?

எல்லார் கையிலும்

"சாட்ஜிபிடி" தான்.


_________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக