மண்டபத்து தருமிகளின்
மண்டைக்குள் இருப்பதையெல்லாம்
அப்ப்டியே
முப்பரிமாணத்தில்
கொண்டு வந்து தந்து விட்டீர்களே
அய்யா!
அற்புதம்.
எழுத்தாளனுக்கு
எப்போதும் கடலளவு ஆசை
என்பது தான்
அவன் பேனாவுக்குள்ளே
அலையடிக்கொண்டு
கருவுற்றிருக்கும்.
அவன் நிப்பு காகிதத்தில்
உரசியவுடனேயே
ஒரு நோபல் பரிசு அவன்
மூக்கு நுனியில்
வேர்த்துக்கொண்டு நிற்கும்.
நீங்களும்
பிறந்த இடம் அந்த
மண்டபத்து மூலை தானா
என்று என்னை
நீங்கள் கேட்பதற்கும்
அல்லது
நினைப்பதற்கும்
எல்லா இடமும் இருக்கிறது.
அந்த மண்டபத்து மூலையில்
இருந்து கொண்டே
ஒரு சங்கப்பலகையை
ஏன் உங்கள் நினைவுகளில்
வருடிக்கொண்டிருக்கக்கூடாது?
அந்த
"அஞ்சிறைத்தும்பியும்
அணிலாடு முன்றிலும்"
உங்கள் மீதும் நிழலாடும்.
எழுத்துக்களின் சிகரம் ஏறும்
படிக்கட்டுகளில் தான்
நின்று கொண்டிருக்கிறீர்கள்
"சீயர் அப்"
என்று சொல்வது போல் தான்
எனக்கு உற்சாகம் பீறிடுகிறது!
தினம் தினம்
உங்கள் கவிதை தரும்
"அமிழ்தம்" எனும் நம் "தமிழ்தம்"
அண்டவெளிக்கும் அப்பால்
என்னை மிதக்க வைக்கிறது
என்பதே உண்மை.
பதினெட்டாம்
மேல் கணக்கோ
கீழ் கணக்கோ
இலக்கிய உள்ளத்தின்
நடுக்கணக்கில் இருந்து கொண்டு
நயம்பட உரைத்து
நம்பிக்கைக்கதிர் பாய்ச்சுகிறீர்கள்.
இது வரை விருது விளம்பரங்களின்
சுவைக்காக என் பேனாவில்
எச்சில் ஊறியதில்லை.
ஆனால் உங்கள் கவிதை
ஒரு எழுத்துத்துடிப்பின்
உள்ளார்ந்த ஓர்மையை
பளிங்குப்பார்வையில்
நன்றாகவே ஒளி பாய்ச்சுகிறது.
நன்றி!நன்றி!!
___________________________________________________
சொற்கீரன்
07-02-2025 அன்று
"இவன்யாரெனக்கேட்பின்.."
என்ற தலைப்பில் எழுதிய
ஈரோடு தமிழன்பன் அவர்களின்
கவிதை பற்றிய கவிதை இது.
___________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக