நெடுமூச்சுகள்.
__________________________________________________
ஈரோடு தமிழன்பன் அவர்களே!
தங்கள் கடலோரக்கவிதைகளின்
பூநுரை புகுந்து
புதுத்திரைகளின்
கடல் நாற்றம்
களித்திடவும் குளித்திடவும்
நசையுற்ற சங்குப்பூச்சிகளாய்
முக்குளியிட்டேன்.
ரம்பப்பல் உருவங்களும்
நச்சுப்பாம்புக்கூந்தல் நெளியும்
வடிவங்களும்
அரங்கேற்றும்
அடாவடிக்கூத்துகளில்
சுருதிகள் செத்துக்கிடந்தன.
ராகங்களின் காக்காய்வலிப்புகளில்
சமுத்திரத்திட்டுகளே பிட்டுக்கொண்டன.
மீன்கள்
வர்ண வர்ணமாய்
நீருக்குள் வந்த நெருப்பில்
வெந்து மாண்டன.
அன்பு பரிமாற்றத்துக்கோ
சொல் விருந்தோம்பல் பேணுவதற்கோ
அல்ல
மொழி அங்கு.
எதிர்ப்பு என்ற
முணு முணுப்புகளின்
குமிழிகள் கூட
சிரச்சேதம் செய்யப்படுகின்றன.
என்ன இந்த அழுகுணி ஆட்டம்?
ஓலங்களும் ஒப்பாரிகளுமா
இங்கு தேவ பாஷை?
கடவுள்கள் எல்லாம்
தாங்களே பிணங்கள் ஆகி
தங்களையே
பிய்த்து தின்னும்
உன்மத்த வெறியா
இங்கு பிரசாதங்கள்?
சாக்கடைகள் கொண்டா
ஆறுகளை சுத்தப்படுத்துவது?
கடல்கள் என்னும் நீரின்
உடல்கள்
கருவாட்டுச்சிற்பங்களில்
முத்திரைகள் காட்டுகின்றன.
முந்நீர் என்றது தமிழ்
கடலைக்குறிக்க.
ஆம்
கண்ணீரும் செந்நீரும்
உளம் கொதித்த வெந்நீருமாய்
சங்கமித்த
மக்களின் அறச்சீற்றத்தின்
அடி அலைகள் தான்
அந்த நெடும்பரப்பின்
நெடுமூச்சுகள்.
______________________________________________
சொற்கீரன்
கடலின் அலைநாயகம் என்ற தலைப்பில்
17-02-2025.ல் ஈரோடு தமிழன்பன் அவர்கள்
எழுதிய கவிதை பற்றிய கவிதை இது.
_______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக