சிலேட்டுப்பலகை 3
_____________________________________________
____________________________________________________________-
மழை நாட்கள் தான்
மண்ணின் மரகத நாட்கள்.
பச்சை எழுத்துக்கள்
சுரம் பாடும்.
வெள்ளை வெயில் அத்தனையும்
காகிதங்களை மலர்த்தினாலும்
பொசுங்கிய கருகல் வரிகளே
கருப்பிடிக்க ஓடிவரும்.
எரிமலை எழுத்துக்களை
எப்படியாவது
அச்சுக் கோர்த்திடலாம் என்று.
பனிக்கண்டங்கள்
பளிங்கு உலகங்களை
உருட்டித்தந்தாலும்
உயிரற்ற
கற்பனைப்பரல்களின்
சிலம்புகளுக்கு அங்கு
அதிகாரம் இல்லை.
இருந்தாலும்
எலும்பும் தோலுமாய்
இற்றுக்கிடக்கும்
இலையுதிர்க் காலச்
சருகுககளின் சலங்கைகளில்
ஏதோ ஒரு சரித்திரம்
சலசலக்கிறது.
அது
உங்கள் கவிதை எழுத்துக்களின்
மெய் ஒற்றுப்புள்ளிகளின்
முத்து மழை அல்லவா!
உங்கள் புள்ளிகளே மின்னல்கள்
என்றால்
அந்த வரிகளின்
ஒளிப்பிழம்புகள்
என்னவாகும்?
--------------------------------------------------------------------------
சொற்கீரன் .
20-02-2025 ல்
"மண்ணோடு மழைபேசுவதை".....
கவிதையாக்கிய
ஈரோடு தமிழன்பனின்
தமிழில் நனைந்த கவிதை இது.
-----------------------------------------------------------------------------------------
சிலேட்டுப்பலகை 3
மழைநாளில்
சொற்களைக்கூப்பிட்டுக்
கோடைக்காலம்பற்றிப்பேசாதே!
ஈரமழை
இதயத்தில் சூடுபோடாதே!
அழைத்து அவற்றுக்கு உன்பாடல்களை
வழங்கு.
மண்ணோடு மழைபேசுவதைக்
காதுகொடுத்துக்கேள்!
அது பூமியின் தாய்மொழியா?
வானத்தின் தாய்மொழியா?
அல்லது
இயற்கையின் பொதுமொழியா?
தெரிந்துகொள்.
மாரிக்காலத்தில்
கதைகளும் பாடல்களும் நன்கு
சதைபிடித்து வளரும்
ஒருபோர்வையில்
இருவர்மூவர் ஒடுங்கி ஓர்
ஆர்மோனியப்
பெட்டிமேல் தடுமாறிவிழுந்தால் எப்படி இருக்கும்?
இளையராஜா அப்படியே
எடுத்து அணைத்துக்கொள்ளமாட்டாரா!
கனவுகளுக்குக்
காதல் தொட்டில்கட்டும் வசந்தகாலத்தில்
கவிதைகளை அழைத்துத்
தோற்றுப்போய் உதிர்ந்த
,கைவிடப்பட்டுக் கண்ணீரில்மூழ்கிய
கதைகளைப்
பந்திபோட்டுப் பரிமாறாதே!
காதல் என்பது இயற்கையின் கொடை!
இது எல்லோருக்குமானது.
வெப்பம் இல்லாத கோடையை
மெல்லிய பனிகூட மதிக்காது
கவிதையின் வாசலில்
கனல்மூட்டும் போராட்ட அறிவிப்பை
இடியேறுகள் முழங்கும்
சுடுவது எப்படியென்றுதெரியாத
கோழை மனங்களிலும் கொதிப்பேறும்.
முன்பனி பின்பனி எல்லாம்
ஓரணியில் திரளும்
கோடையை வாழ்த்தி உருகிப்போகும்!
எலும்பும் தோலுமாய்
இற்றுக்கிடக்கும் இலைகளை
ஏன் வருடிக்கொண்டிருக்கிறாய்?
வாழ்வின் இறுதிப் பக்கங்களை
இலையுதிர்காலம்தான் எழுதும்
உன் சொற்களைக் கூப்பிட்டு
ஒத்துழைக்கச்சொல்!
20-02-2025 மாலை4-49
மண்ணோடு மழைபேசுவதை.....
மனிதனைக் காணவந்த
பகலும் இரவும் இதுவரை
வாயைத் திறந்து மனிதனைப்பற்றி
ஏதும்சொன்னதில்லை
மூச்சான காற்று அவன் வாழ்ந்தது
செத்தது குறித்து இதுவரை
குறிப்பேதும் எழுதிவைக்கவில்லை
செத்தவன் உயிரோடு இருப்பதையும்
உயிரோடு இருப்பவன்
செத்து மடிந்ததையும் கண்டு
மனித
மூச்சு மூர்ச்சித்துக்கிடக்கிறது
கனவுகள்
கூட்டம்கூட்டமாய் வந்து மனினைத்
தொட்டும் உலுக்கியும் முயன்றன
எழுப்ப இயலவில்லை.
இறந்த பகலின் கல்லறையில்
விழிப்பையே
மயக்கத்தில் ஊறவைத்திருக்கிறான்.
காயம்பட்ட அன்பும்ஆசையும்
எப்போது மனிதன் கூப்பிடுவான்
என்று தவித்து
வீட்டுக்கு வெளியே காத்துக்கிடக்கின்றன
மார்பு மறையத் தங்கப்
பதக்கங்கள் அணிந்த பொய்யின்
ஆதரவுகேட்டு
மெய் அனுப்பிய தூது
நேர்காணலுக்கு நேரம்கேட்டுப்
பொய்யின்
நேர்முக உதவியார்முன்
இன்னும் அமர்ந்திருக்கிறது.
புத்தகங்கள்
அறிவுக்கு
இடம்கொடுத்து என்ன பயன்?
மனிதனுக்குள் எப்போது
இடம் கிடைக்கும் என்றல்லவா அவை
தவம் கிடக்கின்றன.
பறவைகளை விரட்டிய
மரங்கள்
கூடுகளை வைத்துக்கொண்டு
என்ன செய்யும்?
மனிதத்தை
விரட்டிவிட்ட மனிதர்களை
வைத்துக்கொண்டு
வாழ்க்கை,
என்ன செய்யலாம் என்று
அந்தமரத்தின் அடியில்
அமர்ந்தா ஆழ்மனச் சிந்தனையில்
மூழ்கும்!
கூடுகளை வைத்துக்கொண்டு....
22-02-2025 காலை 6-40
எல்லா உணர்ச்சிகளும்:
15நீங்கள் மற்றும் 14 பேர்
_____________________________________________________________________
உன் சொற்கள்
மலர்களாக நீயேதான் காரணமாகிறாய்
உன்கண்களில்
விடியல்கள் விழா நடத்தவும்
நீயேதான் காரணம்.
சிறகுகளை எந்தப் பறவையும்
அனுப்பி வைப்பதில்ல
பறவைகள்
உன் கவிதையில் சிறகுகள் கிடைக்குமா
என்றுகேட்டு வருவதுமில்லை.
உன் தூக்கங்களுக்கு
ஒப்பனைசெய்யக் கோடம்பாக்கமா
ஆளனுப்பி வைக்கிறது?
கனவுகளின் பூமியே
மலர்வதற்கு
உன் தூக்கங்களிடம் இரந்துநிற்கிறது.
உன் சினங்கள் சிவக்க நீயேதான்
காரணம்!
உலைக்கூடங்களின் உளவுத்துறைக்கு வேறுவேலை
இல்லாமலாபோனது?
ஒரு புன்னகை
எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு
உன் உதடுகளில்
உட்கார்ந்ததும் அழகின் உச்சியால்
அணைத்துக்கொள்ளப்படுகிறது.
நின்றுவிட்ட ஊஞ்சல்கள்
உன்
நெஞ்சில்உட்கார்ந்து ஆடவருவதில்லை
நெஞ்சிலிருந்து
நீயே விழுந்துவிட்டால்
அதற்கு யார் பொறுப்பு?
அதற்கு யார் பொறுப்பு?-தலைப்பு
19-02-2025 காலை 5-49
நின்று விட்ட ஊஞ்சல்கள்!..
ஃப்ரீஸ் பண்ணியது யார்?
உன் கற்பனை
கால் பதிக்காமல்
முறிந்து விழக் காரணம் என்ன?
தமிழா அது?
அமிழ்தம் அல்லவா அது!
என்ற சொல்
எங்கே தொலைந்து போனது?
பாலிவுட் காடுகளில்
படர்ந்து செழிக்கும்
முள்ளிலைக்கூட்டங்களா
உன் முல்லைத்தமிழை
அள்ளி வீச வருவது?
அதிரடி ஓட்டுகளின்
அலப்பறைகளா
நம் தமிழுக்கு மூடு விழா
நடத்த
நம் நரம்புகளையே வைத்து
தோரணங்கள்
தொங்கல் விட வருவது?
நம் எரிமலைப்பொங்கல்
கொழுந்து விட
எப்போதும் மறப்பதில்லை.
புழுக்களா நாங்கள்?
உழுவை உறுமல்கள் அல்லவா
எங்கள் உள் மூச்சுகள்!
எட்டுத்தொகைகளிலும் ஒரு
எட்டாத சிகரம் உண்டு!
கடல் மூழ்கி எம்மை
அமிழ்த்திய போதும்
வெள்ளம் வடியட்டும் என
"கல் தோன்றி மண் தோன்றும்
முன்னே
வாளுடன்
முன் தோன்றும் மூச்சுத்தமிழின்
வீச்சு சொல் இது!
"தமிழ்ப்பகைமையை
முற்றாய் ஒழிக்கும்
எங்கள் தமிழ்!
_____________________________________________20.02.25
சொற்கீரன்
அதற்கு யார் பொறுப்பு?-என்று
19-02-2025 ல் எழுதிய
ஈரோடு தமிழன்பன் அவர்களின்
கவிதை பற்றிய கவிதை.
____________________________________________
ஈரோடு தமிழன்பன் அவர்களே!
தங்கள் கடலோரக்கவிதைகளின்
பூநுரை புகுந்து
புதுத்திரைகளின்
கடல் நாற்றம்
களித்திடவும் குளித்திடவும்
நசையுற்ற சங்குப்பூச்சிகளாய்
முக்குளியிட்டேன்.
ரம்பப்பல் உருவங்களும்
நச்சுப்பாம்புக்கூந்தல் நெளியும்
வடிவங்களும்
அரங்கேற்றும்
அடாவடிக்கூத்துகளில்
சுருதிகள் செத்துக்கிடந்தன.
ராகங்களின் காக்காய்வலிப்புகளில்
சமுத்திரத்திட்டுகளே பிட்டுக்கொண்டன.
மீன்கள்
வர்ண வர்ணமாய்
நீருக்குள் வந்த நெருப்பில்
வெந்து மாண்டன.
அன்பு பரிமாற்றத்துக்கோ
சொல் விருந்தோம்பல் பேணுவதற்கோ
அல்ல
மொழி அங்கு.
எதிர்ப்பு என்ற
முணு முணுப்புகளின்
குமிழிகள் கூட
சிரச்சேதம் செய்யப்படுகின்றன.
என்ன இந்த அழுகுணி ஆட்டம்?
ஓலங்களும் ஒப்பாரிகளுமா
இங்கு தேவ பாஷை?
கடவுள்கள் எல்லாம்
தாங்களே பிணங்கள் ஆகி
தங்களையே
பிய்த்து தின்னும்
உன்மத்த வெறியா
இங்கு பிரசாதங்கள்?
சாக்கடைகள் கொண்டா
ஆறுகளை சுத்தப்படுத்துவது?
கடல்கள் என்னும் நீரின்
உடல்கள்
கருவாட்டுச்சிற்பங்களில்
முத்திரைகள் காட்டுகின்றன.
முந்நீர் என்றது தமிழ்
கடலைக்குறிக்க.
ஆம்
கண்ணீரும் செந்நீரும்
உளம் கொதித்த வெந்நீருமாய்
சங்கமித்த
மக்களின் அறச்சீற்றத்தின்
அடி அலைகள் தான்
அந்த நெடும்பரப்பின்
நெடுமூச்சுகள்.
______________________________________________
சொற்கீரன்
கடலின் அலைநாயகம் என்ற தலைப்பில்
17-02-2025.ல் ஈரோடு தமிழன்பன் அவர்கள்
எழுதிய கவிதை பற்றிய கவிதை இது.
_______________________________________________
__________________________________________________________
ERODU THAMIZANBAN KAVITHAI PATRI KAVITHAI
ERODU THAMIZANBAN
கடலிடம்
அன்புபாராட்டக் கடலுயிரிகள் யாவும் சுறாக்களின்
மொழியில் தேர்ச்சிபெறவேண்டும்
கடலின்
அரசியல் அமைப்புச்சட்டத்தில்
கட்டாயமாக்கப்பட்டுள்ள 000/பிரிவு ஒவ்வொரு
கடலுயிரியும் தமக்குள் தம்
தாய்மொழியில் கடலரசு அளித்துள்ள
வரம்புக்குள்
உரையாடிக்கொள்ளலாம்
என்று திட்டவட்டமாகச்சொல்கிறது பிறந்த ஐந்து திங்களுக்குள்
சுறாமொழி அறிமுகம் செய்யப்படும்
கடல்நீரில்
எழுத்துப் பயிற்சிதர இமாச்சலச்
சிவாதரவுக்
காற்றும்
பொதிகையில் புதையுண்ட
அகத்தியக் காற்றும்
எப்போதும் ஆயத்தமாக உள்ளன
சுறாமொழி கற்காத
கடல்மாநிலங்களுக்கு இனிமேல்
நீரோ காற்றோ மூச்சோ
கிடைக்காதபடி தடைசெய்யப்படும்.
இரவோ பகலோ
தூக்கமோ கனவோ இனிமேல்
ஒதுக்கப்படமாட்டா.
கடலின்
அலைநாயக அரசில்
நிச்சயமாக
எல்லா உயிரிகளும் சமமானவை
ஆயின்
சில உயிரிகள்
ஆற்றல் திறமை வலிமை
என்பனவற்றின் அடிப்படையில்
அதிகமாகச் சமமானவை.
இதை விவாதிப்பதற்குக்
கடல் அரசமைப்புச் சட்டத்தில்
இடம்இல்லை
ஏனெனில் எல்லா உயிரிகளும்
வாழும் பொதுத்தளமான
ஈரத்தில் வேறுபாடு இல்லை.
இந்த
அலைநாயகக்கோட்பாடு
புரியாமல்
எக்காரணம்கொண்டும் எவரும்
கொடிதூக்கக்கூடாது
போராடக்கூடாது.
எத்தனையோ
டைட்டானிக் கப்பல்களையெல்லாம்
கவிழ்த்த
கடல் அலைநாயகம்
எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாது;
பணியாது.
கடலின் அலைநாயகம்- தலைப்பு
17-02-2025. காலை10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக