புதன், 12 பிப்ரவரி, 2025

யார் அந்த நிலவு?

 

யார் அந்த நிலவு?

____________________________________________


வழக்கமாய் தூங்கப்போகும் முன்

ஒரு இருபது முப்பது பாடல்களாவது

கேட்டுவிட்டுத்தான்

உறங்கச்செல்வேன்.

அத்தனயும் எம் எஸ் வி 

இசையமைப்பு.

வீடியோவில் காட்சிகளுடன் தான்.

இந்தப்பாட்டை நான் கேட்டுவிட்டு

செல்லும்போது

இதன் இசை அமைப்பு 

மேநாட்டு பாணியில் இருந்த போதும்

அந்த கிடாரும் சாரங்கியும்

கூடவே தொற்றிக்கொண்டு வருகிறது.

அதன் எளிய மெட்டில்

எத்தனைக் கடல்கள்

சுருண்டு அலையடிக்கின்றன.

இனிமையயே உளியாய்க்கொண்டு

மெல்லிதாய் இனிதாய் 

இனிய மெல்லிசையே கொத்தி கொத்தி

குயிலின் அலகுக்கீற‌ல்களிலிருந்து

இனிய இன்பத்தை

பிழிந்து பிழிந்து தருகிறது.

சிவாஜியின் நடிப்பு மிகவும் சிகரம்.

அந்த சிகரெட்டின் புகைச் சிகரத்தில்

சொல்லொணா ஒரு வலியையும்

வளையம் இட்டுக்கொண்டு

தளர் நடையில்

தவித்து தவித்து 

பாடலின் கனபரிமாணத்தை

உருக்கி உருக்கி நம்மை

உருக வைத்து விடுகிறார்.

தூக்கத்தில்

புகைப்பழக்கம் இல்லாத எனக்கு

வெள்ளை வெள்ளை சிகரெட்டுகள்

மாணிக்கத்தூண்களை நிறுத்திய‌

விண்வெளியை 

கனவு போலவும் இல்லாமல்

காட்சிபோலவும் இல்லாமல்

ஒரு கவிதை மண்டலத்தை

மிதக்க விடுகிறது.

"சாந்தியில்"வருகிறது இந்த பாட்டு.

கவியரசுவின் சொல் மகுடம்

எங்கோ ஒரு உயரத்து சிம்மாசனத்தில்

அவரை அமர்த்திப்பார்த்து

மகிழ்கிறது


________________________________________

சொற்கீரன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக