வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

"டெலிபோர்டேஷன்..."


"டெலிபோர்டேஷன்..."
_________________________________________

நான் தூங்கும்போது
அவன் அல்லது அவள்
விழித்திருக்கிறாள்
அல்லது
விழித்திருக்கிறான்
அந்த இலக்கண விளக்கெண்ணெய்களை
வீசி விட்டு வா.
சரி.
நான் நடக்கும்போது
அது என் தோளில் உட்கார்ந்திருக்கிறது.
எதிரே
யாரையாவது பார்க்கும்போது
அது அங்கு தாவுகிறது.
அவர் பார்வைக்குள் புகுந்து
அது என்னை பார்க்கிறது.
தொலைந்தது என்று
சரசரவென்று போய்க்கொண்டிருந்தேன்.
என்ன தப்பி விட்டோம்
என்ற நினைப்பா?
இப்போது குரல்
எங்கோ
என் உள் மண்டையின்
ஏதோ ஒரு நரம்பு முடிச்சுகளை
அவிழ்த்துக்கொண்டே
உரையாடுகிறது.
என்ன இது?
கிளு கிளுப்பாய் பேசுகிறது.
அப்படியென்றால்...
அப்படித்தான்
சரி சொல்லமாட்டாயா..
சரி போ.
ஏய் மடையா
உன்னை அந்த கோவில்குளத்துக்கு அல்லவா
வரச்சொல்லியிருக்கிறாள்.
நீ எங்கே இங்கே
அந்த கோவிலையெல்லாம் தாண்டி
இங்கே வந்திருக்கிறாய்.
உன்னை எமாற்றலாம் என்று பார்த்தால்...
என்னை நீ
உளவு பார்க்க முடியாது.
சரி..சரி..
திரும்புகிறேன்.
யாருமில்லாத
காற்றின் எந்த மூச்சு சப்தம் கூட‌
இல்லாத தனிமை என்று
அல்லவா
அந்த குளத்தை
சொன்னது.
சொன்னாள்.
சொன்னான்.
மறுபடியும்
தன்மை முன்னிலை படர்க்கை
என்று இலக்கணத்தின்
டயட் கோக்கை உறிஞ்ச ஆரம்பித்து விட்டான்.
ஆம்
அந்த பழமுதிர் சோலையில்
அந்த டயட் கோக் குடிப்பது
அவனுக்கு பிடிக்கும்.
நல்லவேளை என் தொண்டைக்குள் வந்து
அது குமிழியிடவில்லை.
கொஞ்சம் ஃப்ரீ ஆனான்.
விடுதலையுற்றவனாய்
அவன் அந்த இடத்துக்கு வந்து விட்டான்.
"சமரசம் உலாவும் இடம்" தான்
காதல் கடவுள் கத்தரிக்காய்
எல்லாம் இல்லாத‌
அந்த இடத்துக்கு வந்து விட்டான்.
சரி.
இப்போது ஆழ்ந்த மிகவும் ஆழ்ந்த‌
ஒரு வானத்துக்குள் அல்லது
கடலுக்குள்
மூழ்கியது போல்
உணர்ந்து கொண்டிருக்கிறான்
ஏதோ ஒரு சொல் அவன் நெஞ்சுக்குள்
சம்மடி கொண்டு
அடித்துக்கொண்டே இருந்தது.
அதே சொல்...
திரும்ப..திரும்ப..
இவன் இப்போது
"துரியம்" தாண்டிவிட்டான்.
துரியமா?
ஆம்...ஓமின்
அப்பாலுக்கும் அப்பாலாய்...
இன்னும் சொற்களின் சூனியத்தை
பார்க்க வேண்டுமா?
அந்த "கட முடா கர் புர்.."
உபநிஷத்துக்கு போங்கள்
அவன் மூழ்கிவிட்டான்
அல்லது மிதக்க ஆரம்பித்து
விட்டான்.
அந்த...
நான்
அது அவன் அவள் அவர்கள்
நீ நீங்கள்..
எல்லாம் கழன்று போனது.
இது என்ன வெளி..
அண்டமா? குவாண்டமா?
சைக்கிளிக் யுனிவெர்ஸா?
தெரியவில்லையே.
அவனைத்தொற்றிக்கொண்டே
வந்த அந்தக் குரல்
திகைத்துப்போனது.
அந்த சொல்லை எட்டிப்பிடிக்க‌
அதனால் முடியவில்லை.
அதற்குள் அது
பலப்பல பில்லியன்
ஒளியாண்டுகள் கடந்து போய்விட்டது.
சரி நாம்
அந்த எதிர்முனைக்கு சென்று
நிற்போம்
அங்கே
எப்படியும் மோதித்தான்
ஆக வேண்டும்.
அதுவும் பலப் பல பல....
பில்லியன் ஒளியாண்ட்ட்ட்ட்ட்
கடந்து எதிர்ப்பட‌
காத்திருக்கிறது.
மெட ஃபிசிக்ஸ்ம்
பிசிக்ஸும்
இப்படித்தான் கொஞ்சிக்கொண்டு
அந்த சனியன் பிடித்த‌
கடவுள் பார்டிகிளுக்கு
அடித்துக்கொள்ளூம்
இடையில் உள்ள‌
அந்த "தின் ரெட் லைன்"....
தமிழில் உரைக்க மாட்டீர்களோ
அதாங்க‌
அந்த மெல்லியை சிகப்பு
(மயிரி)ழை...
சரி எப்படியோ தொலைங்க!
___________________________________________________‍‍
"தொலைநோக்கியன்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக