முத்து மழை
-----------------------------------------------------------------------
மழை நாட்கள் தான்
மண்ணின் மரகத நாட்கள்.
பச்சை எழுத்துக்கள்
சுரம் பாடும்.
வெள்ளை வெயில் அத்தனையும்
காகிதங்களை மலர்த்தினாலும்
பொசுங்கிய கருகல் வரிகளே
கருப்பிடிக்க ஓடிவரும்.
எரிமலை எழுத்துக்களை
எப்படியாவது
அச்சுக் கோர்த்திடலாம் என்று.
பனிக்கண்டங்கள்
பளிங்கு உலகங்களை
உருட்டித்தந்தாலும்
உயிரற்ற
கற்பனைப்பரல்களின்
சிலம்புகளுக்கு அங்கு
அதிகாரம் இல்லை.
இருந்தாலும்
எலும்பும் தோலுமாய்
இற்றுக்கிடக்கும்
இலையுதிர்க் காலச்
சருகுககளின் சலங்கைகளில்
ஏதோ ஒரு சரித்திரம்
சலசலக்கிறது.
அது
உங்கள் கவிதை எழுத்துக்களின்
மெய் ஒற்றுப்புள்ளிகளின்
முத்து மழை அல்லவா!
உங்கள் புள்ளிகளே மின்னல்கள்
என்றால்
அந்த வரிகளின்
ஒளிப்பிழம்புகள்
என்னவாகும்?
--------------------------------------------------------------------------
சொற்கீரன் .
20-02-2025 ல்
"மண்ணோடு மழைபேசுவதை".....
கவிதையாக்கிய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக