வியாழன், 6 பிப்ரவரி, 2025

அந்த சுரங்கத்துக்குள்...

 

ஏழு சுரங்களின்

அந்த சுரங்கத்துக்குள்

எத்தனை எத்தனை

ஒலி விரிப்புகளோ?

அவற்றை எல்லாம்

ரத்னக்கம்பளம் ஆக்கும்

பாடல்கள்

கவிஞனின் சிந்தனைக்குள் 

அல்லவா

சுவடு பதிக்க வேண்டும்.

இதில்

தூங்குவது யார்?

விழித்திருப்பது யார்?

கனவுகளில் புதைந்திருப்பது

யார் அல்லது எது?

இந்த முக்கோணம் கூட‌

ஒரு மர்மமான‌

பெர்முடா முக்கோணம்.

இந்த ரசவாதத்தில்

யுகங்களே மூழ்கி விடுவதுண்டு.

காலத்தின் 

கால் கெண்டை நரம்புகள் தான்

வீணைக்கு கடன் வழங்கியிருக்கும்.

அது நொடிப்பொழுதின் சிட்டிகையில்

எத்தனை ஜிகினா உலகங்களை

மிதக்க விடுமோ?

யார் பாடியது?

பாட்டுக்கு சொந்தக்கார பேனா எது?

வீணையின் தந்திக்கம்பங்களில்

உட்கார்ந்திருக்கும்

அந்த தேன் சிட்டுகளா

இந்த அமுத மழையை பொழுவது?

இப்போது

இந்த கேள்வி விழுதுகள்

சாருகேசியிலா

ஆனந்த பைரவியிலா

எந்த சாயத்தில் முக்கி

எடுக்கப்பட்டிருக்கும்.

சரி விடுங்கள்.

சபா கேண்டீனில்

மசாலா போண்டா

மூக்கு நுனியில் தொட்டு தொட்டு

கூப்பிடுகிறது.

சரஸ்வதி வீணையை

அங்கே போய் 

தரிசித்து விட்டு வரலாம்!


_________________________________________________

சொற்கீரன்


06.02.2025ல் 

பாடல் உறங்குமோ?

வீணை எழுப்புமோ?

என்ற தலைப்பில் வந்த‌

ஈரோடு தமிழன்பன் அவர்களின்

கவிதை பற்றிய கவிதை இது.

_____________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக