கூடு
_________________________
ஆகாயமும் சிறகுகளும்
இங்கு தான் வீடு கட்டிக்கொண்டன.
மண்ணில் எல்லைக்கோடுகள்
போட்டுக்கொண்டு
சண்டையிட்டுக்கொண்டதில்
மனிதம் மக்கிப்போனது.
சிட்டுக்குருவிகளின்
சப்தங்களுக்கு
நான்கு வர்ண தீட்டுகள் ஏது?
வானம் நிறைய நிறைய
சிவந்து
இதயம் விரித்தபோது
நீ அதை பார்ப்பதே இல்லையே.
கத்தி தீட்டிக்கொண்டிருப்பதும்
கடவுள்களை கசாப்பு செய்து
தின்று கொண்டிருப்பதுமாய்
இருந்தால்
வானத்தின் "அகரமுதல"
உனக்கு எப்படி புரியும்?
வேதம் ஒலித்தவனும்
யாகத்தின் தீக்குழி வயிற்றில்
பசுக்களைத்தானே பொசுக்கினான்.
அப்போது
முகம் கரிந்து போன
"பிரம்ம"னின் அடையாளம்
இன்னும் யாருக்கும் தெரியவில்லையே!
சிந்தனையின் சிறகு முளைத்தவன் தானே
அந்த சிட்டுக்குருவிகளுடன்
பேச்சு வார்த்தை நடத்த முடியும்.
சிந்தனை ஆகாயமாய்
விரிந்து கொண்டபோது தானே
விண்மீன்கள்
எழுத்துக்கள் ஆகும்"
சொற்கள் ஆகும்"
அப்புறம் உன் கணினிகளும் கூட
அங்கு தானே
நூலகங்களாய் இறைந்து கிடக்கும்.
உன் நியூரான்கள் கூட
பலூனில் குமிழிகள் விட்டு
விளையாடும்
செயற்கை மூளைகளின்
செம்மன வனங்களாகும்.
கொஞ்சம் மேலே
அண்ணாந்து பார் போதும்.
அப்போது தெரியும்
நீ
எத்தகைய வெறுப்பும் பகைமையும்
கொண்ட சாக்கடைகளின்
சதுப்புக்காட்டில்
மூழ்கிக்கொண்டிருக்கிறாய் என்று!
_____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக