பதிவை உருவாக்குக


ஃபீடு பதிவுகள்

காதோரம் வந்த
காற்று அள்ளிவந்த தெம்மாங்கை
அவிழ்த்துவைத்தது
சொக்கிப்போன என்னைக்
கொக்கிபோட்டிழுக்க
ஆராரோ ஆரிரரோ வாசல்படி தாண்டி
நுழைந்துவிட்டது
என் தாய் வள்ளியம்மா
வந்துவிட்டார்
நான் கிடந்த தொட்டிலும் வந்துவிட்டது
மூப்பைத் தூக்கி
மூட்டைகட்டி எறிந்துவிட்டுத்
தொட்டிலை விலக்கி என்தாய்முகம்
கண்டேன்
ஜெகுக் கண்ணா தூங்கடா
என்றாள் அம்மா!
தூங்கினால்
பாட்டை எப்படி அம்மாநான் கேட்பது
என்றேன்
தொட்டில் தொடர்ந்து ஆடியது
அம்மா தாலாட்டும் தொடர்ந்தது!
காதோரம்
வந்த காற்று இன்னொருநாள்
பட்டினத்தார் பாட்டுப்
பொட்டலத்தைப் பிரித்து வைத்தது
தாயின் பிரிவுத்துயரின்
ஆற்றாமையால் அவர்பாடிய பாடல்
தங்கவேல்அண்ணன் கண்ணீரில்
விழுந்தபோது அது
கடலாகிப்போனது
கரைகாணாமல் தேம்பியது
என் தாயின் முதல்மகன்அல்லவா!
அவள் கனவுகளின்
முதல் முத்தமல்லவா அவர்!
காதோரம்
வந்த காற்று மற்றொருநாள்
சட்டென்று விலகிப்போனது
தமிழ்மறந்த ஒருவனின்,
தமிழ்கெடுப்பார் கைக்கூலியாக
மாறிவிட்ட ஒருவனின்,
தந்தைபெரியாரைத் தரம்தாழ்த்திப்
பேசும் ஒருவனின்,
மூச்சுச் சடலத்தை அன்று
தொட்டுவந்ததுதான்
காரணமாக இருக்குமோ?
13-02-2025 முன்னிரவு 7-15
தலைப்பு- காதோரம் வந்த காற்று



-----------------------------------------------------------------------------------------

ஒரு ராட்சசப்பறவையின் எச்சம் போல் தான் நம் மீது இந்த மரணம் வந்து விழுகிறது. வானமே வானம் கொள்ளாத சிறகுகளையும் கூர் நகங்களையும் கொண்டு நிழல் காட்டுகிறது. சூரியன் கூட அந்த மேகக் கைக்குடைகளினால் கண்ணீர் துடைத்து துடைத்து நகர்கிறான். கண்ணீர் ஏழு வர்ண நிறப்பிரிகையில் ஏழாயிரம் சோகங்களாய் பிழியும்போது கூட‌ அடி உள்ளத்தின் கேவல்களே உங்கள் அகவல் பாக்கள். ஆனால் அதனுள்ளும் உங்கள் எரிமலை ஈரமாயில்லை. அந்த ஈன மகன் அன்னைத்தமிழ் முகத்தில் ஆசிட் வீசிட பெரியாரை முகவரியை சிதைக்கத்துணிந்தான். ஈரோடு ஈரோட்டிலா இருக்கிறது. தமிழ் நெஞ்சங்களின் இழைகளின் "நெசவுகளில்" அல்லவா இருக்கிறது! உங்கள் கவிதையில் ஒரு அழுகை அக்கினி ஆற்றின் ஊற்றில் இருந்து தானே பெருகிக்கொண்டு ஓடுகிறது! ___________________________________________________ சொற்கீரன்.

13-02-2025 ல்

 "காதோரம் வந்த காற்று"

என்ற தலைப்பில் எழுதிய‌

ஈரோடு தமிழன் அவர்களின்

கவிதை பற்றிய கவிதை இது.