புதன், 5 பிப்ரவரி, 2025

தமிழன்பன் சிலேட்டுப்பலகை

______________________________________________________________________________________
31.01.2025


படகில் ஏற்றிக்
கடலை வேறு இடத்துக்குக்
கொண்டுபோகமுடியாது
உண்மைதான்!
கூடையில் அமர்த்தி
மலையை வேறு ஊருக்குக்
கொண்டுபோக முடியாது
உண்மைதான்!
ஆனால்
மனிதனை
நகர்த்த முடியும்
கடல்அளவு அறியாமையில்
இருப்பவனை
அறிவுப்பூமிக்குக் கொண்டுசெல்லப்
படகுகளைக்
கல்வித்தச்சன் செய்துகொடுப்பான்
புடைக்கக் கையில்
பகுத்தறிவு
முறம் இருந்தால் போதும்
மலைகளைப்புடைத்துத்
தூற்றலாம்.
மிஞ்சி முறத்தில்
இருப்பதை அசையா அறிவுப்
பல்கலைக் கழகங்கள்
பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்
எழுத்துகளாகா
உடுக்குலம் பூமிக்கு வந்தால்
தமிழின் தயவில்
பள்ளிப் பாடநூல்களின்
எழுத்துக்குடியிருப்பில்
இருந்துகொள்ளலாம்.
கோடம்பக்கம் போனால்
பாலுமகேந்திரா பாலச்சந்தர்
பாரதிராஜா
பயன்படுத்திய படப்பிடிப்புக்
கருவிகள் கிடைக்கலாம்
உடுக்குலமே
கதை வசனம்எழுதி
ஒருபடம் எடுக்கலாம்.
நடிப்பதால் யாரும்
நட்சத்திரமாகும் நாட்டில்
நட்சத்திரங்களே நடிக்கவந்தால்
என்னதான் ஆகமுடியாது?
எதுதான் ஆகாது?-தலைப்பு
31-01-2025



________________________________________________

30.01.2025


 பதிவு செய்யப்பட்ட பின்னூட்டத்தில்

வெற்றி உதடு திறந்த வேளைகளில்

பொருத்தம் புன்னகைக்கிறது
ஆனால் அஞ்சல்நிலையங்கள்
கெஞ்சின
"எங்கள் மூலமாக எதையும்
அனுப்பமாட்டீர்களா?"
காகித உலகம்
கண்ணீர் வடித்தன
"பனையோலைகள் இடத்தைக்
கைப்பற்றி வெற்றிக்கொடி
பறக்கவிட்டோம்!
எங்கள் கதை இனிஅவ்வளவுதானா?"
விற்பனையாகாத
அஞ்சல் தலைகள் தோல்வியை
முட்டிமோதி
"நாங்கள்
வரலாற்றை நினைவுபடுத்தினோம்
அறிவியல்திருப்பங்களை
விருந்துவைத்தோம்;
கைம்மாறாக
எம்மை ஒதுக்கிவைத்தீர்கள்
புறாக்களின்
அஞ்சல்பணிகளை நாங்கள்
புதைத்தோம் என்பதற்காகப்பெற்ற
பரிசா இது?"
தூதஞ்சல் துறையும்
இணையவழி வந்துவிடும்
அமேசான் வழியாகச்
செயற்கைநுண்ணறிவு
பெற்றெடுத்த
காதலனையோ
காதலியையோ அனுப்பும் காலம்
வரலாம்.
பிறகு
பேரன்பேத்திகள் வருவார்கள்.
பின்னூட்டத்தைச்
செயற்கை நுண்ணறிவு
பிழையில்லாமல் செய்யும்.
என்றாலும் எல்லாம்
அடித்தல் திருத்தல் இல்லாமல்
கிழக்கு
வைகறையை அச்சிடுவதைப்
பொருத்தே இருக்கும்!
30-01-2025 காலை9-30
தலைப்பு
இனியில்லை அந்தக்காலம்!
__________________________________________________________________---




ERODU THAMIZANBAN.

அளப்பரிய துயரம்....
வார்த்தைகள் தொட்டால்
அது
வானைத்தொடுமளவு வளர்ந்துவிடலாம்
சொத்தைப்பல்
விழுவதுபோல் உடுக்கள் ஒவ்வொன்றாய் உதிர்ந்துவிழலாம்
இருள்போட்ட கையெழுத்து
மதவெறிக்கு
மாற்றுமத மார்புகளைத்திறக்கலாம்
மதங்களைவிட்டு
வெளியேறிய கடவுள்கள்
கருணைசெய்யக்கேட்டுக் காலத்தைக்
கெஞ்சலாம்
முன்னோனாய் இருந்து
இனங்காத்தவன் சிலையைத்
தகர்க்க
எவரிடமோ கூலிவாங்கியவன்
வரிந்து கட்டிக்கொண்டு ஓடுகிறான்
அவனுக்குப்
பொருள்அழுகிய
சொற்களில் குடியிருந்த எழுத்துகள்
ஆதரவுப்பேரணிகள் நடத்தலாம்
வஞ்சகப் பட்டறைகள்
கடப்பாரைகள் வடித்துத் தரலாம்
வரலாற்றுக்குள்
பொய்கள் வாளோடு புகுந்து
உண்மைகளை அச்சுறுத்தி
வெளியேற்றலாம்
பொய்முட்டைபொரித்த நச்சுப்பூச்சிகள்
பாடநூல்கள் பக்கங்களில்
குறிவைத்து நுழையலாம்
கழிசடைக் கதைகளின் பல்லின்
இடுக்கில் கசியும் சீழை
வைகறைகள் கையேந்த ஒப்புமோ?
அந்திகள் குனிந்து
வணங்கித் தப்புமோ?
விளக்குகளுக்குள்
படுக்கைபோட்டு உறங்கிய வெளிச்சங்களை
எழுப்பவந்தவன்மேல்
சமூகநிம்மதி குலைத்தவன் என்று
ஆள்வோர் சட்டங்கள் அலறலாம்
தீர்ப்புகள் சிறைகளைத் திறக்கலாம்
தண்டனைகளில்
மிச்சமானவை கடைவாயில்
குருதியொழுகஇப்போதும் அவன்மீது
தப்புச் சொல்லலாம்
ஆயிரம் மறப்போர்ப் பரணிகளின் பரம்பரை
எறும்புகளின் சிறுசிறு கால்களின்கீழே நொறுங்கியா
இறந்துபோகும்?
03-02-2025 காலை 9-40
தலைப்பு -உறங்கிய வெளிச்சங்களை
எழுப்பியவன்

அறப்போரின் மறச்சீற்றங்கள் வெறும் சிற்றெறும்பு ஊரல்களா? உங்கள் சொற்களின் ஏவு கணைகள் அந்த இருள் முட்டிய‌ வானங்களை குத்தின. கிழித்தன. மழுங்காட்டம் ஆடுகின்ற‌ மண் பொம்மைகள் இல்லை இவை. ஆயிரம் அழிவுகளை கர்ப்பம் தரித்து வந்திருக்கும் சித்தாந்தக்கூட்டம் ________________________________________________________________________________
எத்தனைபேர்
விழிப்பார்கள் என்று எண்ணிப்பார்த்து
விடிவதில்லை கிழக்கு.
எத்தனைபேர் தூங்குவார்கள்
என்று கணக்கெடுத்து
வருவதில்லை இரவு.
உலகுக்கு வேண்டிய
கனவுகளை உற்பத்தி செய்து வைத்துவிட்டு
தூக்கம் வழங்குதுறை அன்றாடும்
கதவு திறப்பதில்லை.
தொட்டில் ஆடும்
வீடுகளின் புள்ளிவிவரம் கிடைத்தபின்
தாய்மார்கள் பாடத்
தாலாட்டுகளை எந்த மொழியும்
தயாரிப்பதில்லை.
பயன்படுத்தாத
மூச்சுகளைக்
கல்லறைகளுக்கு முதலிலேயே
அனுப்பிவைத்தவன் மார்புக்கூட்டில்
வாழ்க்கை எந்த நொடியும்
துடிப்பதில்லை.
மருந்துக் குப்பிகளில் அட்டைகளில்
அடைபட்ட நாள்களை
எந்த வங்கியில் செலுத்தியும்
நோய்நொடி இல்லாத
நாள்களாக
மாற்றிக்கொள்ள வாய்ப்பில்லை
அதேபோல
நலம்தரும் நாள்களை எந்த வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில்
வைத்துப் பூட்டவும் வழியில்லை.
05-02-2025 காலை 9-42?
தலைப்பு ஏன் இல்லை





மூச்சுகளை







மூச்சுகளை
முதலிலேயே கல்லறைக்
கு
அனுப்பி விட்டு தாயின் கருப்பையை சிதைக்கவே பிறப்பு எடுக்கலாம் என்று எண்ணுபவ‌ன் எவனோ அவனே கடவுள் அவதாரத்தின் புராணங்களுக்கு சப்பளாக்கட்டைகளை தட்டிக்கொண்டு வருவான். அது கடவுளின் கருப்பை தான் என்று சிந்தனை இல்லாத அவன் மனம் என்ற ஒன்று இல்லாத‌ மூளிப்பிண்டமே. சீன நெடுஞ்சுவர் போல் ஏறி இறங்கி வளைந்து நெளிந்து வார்த்த உங்கள் வார்த்தைக்கூட்டம் கவிதை என்ற பெயரில் வைரமணிகளை கல கலவென்று கொட்டி எங்களுக்கு பல்லாங்குழி ஆடக்கொடுத்திருக்கிறதே! ___________________________________________________ சொற்கீரண். 05.02.2025 அன்று "ஏன் இல்லை" என்ற தலைப்பில் ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய கவிதை பற்றிய‌ கவிதை இது. ______________________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக