வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

ஒரு சொல்லில்....

 

"எல்லாமும் எல்லார்க்கும்"

இது வெறும் சொல் வரிசை அல்ல.

சமுதாய சிந்தனையாளர்களிடம்

எரிந்துகொண்டே இருக்கும் 

சித்தாந்த வெப்பம்.

வயிற்றுப்பசியா?

மனத்தின் பசியா?

அறிவுப்பசியா?

ஒன்று தீர்ந்து

இன்னொன்று பற்றவைக்கப்படும்

தீயின் பிஞ்சு.

இந்த தீ கூட பூ தான்.

இதன் மகரந்தங்களில்

கொத்து கொத்தாய்

நட்சத்திரக்கூட்டங்கள்.

மனிதன் கனவுகளில்

பந்தல் போட்டுக்கொண்டு

நிழல் கொடுக்கும்.

ஆம்.தீயின் நிழல்.

மனிதம் 

மொத்தமாய் 

திரளும்போது

மனிதம் மறைந்துப்போகிறது.

அப்போது தோன்றும்

மாணிக்கச்சொல் ஒன்று உண்டு.

விலை மதிக்க முடியாத‌

வரலாற்று உணர்வுகளும் நிகழ்வுகளும்

பின்னல் காட்டும்

மாண்பு மிக்க சொல் அது.

மனிதர்களிடையே

வெறுப்பின் வெடிப்புகளே

தோன்றாத பண்புப்படிவத்தின்

ஒரு உயிரிய வார்ப்பு அது.

இந்த உலகமே 

கோடி கோடி மக்களின்

மற்றும் உயிர்களின்

பொது உயிர்மை அது.

என்ன சொல்ல வருகிறீர்கள்.

பொது உடைமை தானே அது.

நான் எதுவும் சொல்ல வரவில்லை.

அந்த "ஏ ஐ"யின் சொல் அடுக்கு  வேகம்

மில்லியன் க்யூபிட்டுகள் 

என்றார்கள்.

குவாண்டத்துடிப்புகளின் அந்த‌

சிப்பில்

சொருகிய கேள்வி இது தான்.

நம் மொத்த இருப்புகளின் 

ஒருங்கு அடைந்த நோக்கம் என்ன?

அது ஒரு சொல்லில்

தெறித்து நின்றது.

அது "தோழமை"


_____________________________________________________

சொற்கீரன்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக