சிலேட்டுப்பலகை.....4
ஃபீடு பதிவுகள்
காற்றை
யார் அவிழ்த்துவிட்டவரோ
வானை
யார் விரித்துப் போட்டவரோ
கடலுக்கு
அவர்
கண்களைத் திறந்துவைத்துக்
காட்சியானவன் தமிழன்!
பூவின்
இதழ்களை எப்போது முதலில்
செடிகள் திறந்து வைத்தன?
மழையின்
முதல் துளியை எப்போது முதலில்
கார்முகில் செய்தது?
அலையின்
முதல்நகர்வைஎப்போது முதலில்
நதி செய்தது?
அப்போதின்
நாவை மெல்ல நகர்த்தி
எழுந்த மொழி தமிழ்!
தொட்டில்
குழந்தைக்கு எதுமுதலில் தங்கத்
தாலாட்டுப் பாட்டுக் கட்டியது?
ஐவகை
நிலத்தை வாழ்வை எதுமுதலில்
இலக்கியம்செய்ய முந்தியது?
காலத்தின்
இன்பக் கனவை எதுமுதலில்
நிறைவேற்றி வரலாறு கண்டது?
தொன்மையின்
காதுகளில் மின்னலடிக்கிற
தோடுகளாய் ஆனதமிழ் நாடு!
தொன்மையின் காதுகளில்தோடுகள்
02--3-2025; 02-30. பிற்பகல்
புல்லை நகையுறுத்தி
_______________________________________________________
சொற்கீரன்.
புல்லை நகையுறுத்தி
_________________________________________________
சொற்கீரன்.
புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி
கிழக்கை ஒளியாக்கி
விடியல் வழியாக்கி
தந்த ஒலியே தமிழ்!
விண்ணே அகன்று நின்று
விழியாகி தந்ததும் தமிழே!
ஒலிக்கடலில் நாவாய் சுழன்று
ஒரு நாவலம் மிகுந்த
நாடு தந்ததே நற்றமிழ் தான்!
நா வல்லவன் நாவாய் ஏறி
நாடுகள் கண்டு மொழிகள் கொண்டு
உலகம் ஆண்டதும் தமிழே தான்.
தமிழ் ஊர்ந்த பற்பல ஊர்கள்
கடல்கள் தாண்டியும்
தடம் பதித்ததும் பெருந்தமிழே.
உலக மொழிச் சொற்களிலே
கிளைகள் பரப்பிக் காட்டி
வேர்களாய் நின்று ஒலிப்பதுவும்
தமிழ் தமிழ் தமிழே தான்.
---------------------------------------------------------------------------------------------------
உதட்டில் இருந்து இறங்கிய
குழந்தையின் குரல்
எங்கள்
தெருவின்கலவர ஓசையில்
சிக்கித் தவிக்கிறது.
திடுக்கிட்டுத் தொட்டில்கள்
ஆடுவதை நிறுத்திவிட்டன
குயிலின் பாடல்
எங்களூர்ப்
போக்குவரத்து வண்டிகள்
அலறலுக்குள் தகர்ந்து சிதைகிறது
கிளிகள் பேச்சு
உடைந்து நொறுங்குகிறது.
உறவுமுறையில் யாரோ
இறந்துபோனதால் துக்கம் விசாரிக்க
வந்தவரகள் வண்டி
ஒருதிருப்பத்தில் கவிழ்ந்து விழுந்ததால்
அவர்கள் கொண்டுவந்த ஒப்பாரிப்பாடல்களின்
குருதி தெருவெல்லாம் பரவிச்
சிவக்கிறது.
விருந்து வந்தாலென்ன
வராமல்போனால்தான் என்ன?
கரைவுகளைக் கூடுகளில் வைத்துப்
பூட்டிவிட்ட காக்கைககள்
வீட்டுக் கூரைகள்மேல் கூடித்
துக்க அமைதி கடைப்பிடிக்கின்றன.
காற்றின் காதுகளில்
பண் திறந்த ஓசை,பாத் திறந்தஓசை
விழவில்லை
புண்திறந்த ஓசைகளால்
புழுநெளியும் கத்தல்களால்
உலகெரியும் ஊர்கருகும்
விலகி எங்கே போவதென
இயற்கையே நெஞ்சம் மறுகும்.
இயற்கையின் துயரம்-தலைப்பு
01-03-2025காலை 7-50
_________________________________________________________________________
------------------------------------------------------
காலமே வா!காத்திருக்கிறேன்
உன்னை எதிர்பார்த்து.
கண்களில் நீ
சினமேந்தி வந்தாலும்
நான் கைகளில் பூங்கொத்தோடு
வருகிற வழியில் உனக்குக்
காயங்கள் ஏற்பட்டிருந்தாலும்
உன்னை வாரி அணைப்பேன்
மருந்துகள் தடவுவேன்.
கற்களின்
கரடுமுரடான சொற்களோடு நீ
வந்தாலும்
தமிழ் உனக்கெனச் செய்துதந்த
அழகொழுகும் சொற்கள்
என்னிடம் எப்போதும் உண்டு!வா!
நீ கொண்டுவரும் கூடையில்
முள்களைமட்டுமே நீ
நிரப்பியிருந்தாலும் கவலையில்லை வா!
என் மூளையும் மனமும்
உனக்கென வைத்திருக்கும்
முக்கனிகள்எப்போதும் என்னிடம்உண்டு
உன்கூடையை நான் நிரப்பித்தருவேன்.
கொண்டாட்டப் பதாகை
உயர்த்தியுள்ள எனது குடிலுக்குக்
கண்ணீர்க் கோப்பையோடு
காலமே நீ
வருவதாயினும்வருக!
உன்னை வரவேற்க மாசில்லா என்
அன்பும் ஆசையும்
புன்னகையோடுநின்றிருக்கும் வா!
காலமே!
நற்செய்திகள் உன்னிடம்
இல்லையெனினும் வருந்தமாட்டேன்
வா!உனக்கான சில கவிதைகள்
என்னிடம் எப்போதும்உண்டு.
நான் இருக்கும்போதே நீ வந்தால்
நானே படித்துக்காட்டுவேன்.
ஆனால் காலமேநீ
காலம்தாழ்ந்து நான்இல்லாதபோது
வருவாயானால்
நீயே அவற்றைப்
படித்துமகிழலாம் பாராட்டலாம்
மனமிருந்தால் பாதுகாக்கலாம்.
காலத்துக்கு ஒரு கவிதை.-தலைப்பு
27-02-2025 காலை 6-40
காலா வா!
உன்னைக்காலால் எட்டி உதைக்கின்றேன்
என்று "காலத்தோடு"
எசப்பாட்டு எழுதிய மகாக்கவி
நமக்கு மன நல மருத்துவக்கவிதை
தந்தது
மனித நம்பிக்கையின் சிகரம்.
நீங்கள்
எழுதியதும் மிக மிக உயர்ந்து நிற்கும்
"மனிதம்"
காலத்திற்கு எழுதிப்படித்த
காலமே தனக்கு
"ரோமாஞ்சலி" செய்துகொள்ளும்
சொற்சிலிர்ப்புகளின்
புறநானூற்றை
அகநானூறுகளில்
பொதிந்து கொடுத்துக்கொண்டு
அகமகிழும்
அருமைக்காவியம் !!!
______________________________________________
சொற்கீரன்
(காலத்துக்கு ஒரு கவிதை
என்ற தலைப்பில் 27.02.2025ல்
எழுதிய ஈரோடு தமிழன்பன் அவர்களின்
கவிதை பற்றிய கவிதை இது.)
28.02.2025.
____________________________________________
____________________________________________________
தூக்கத்தில் நடக்கிற வியாதி
எனக்கு.
கால் போகிற போக்கா?
மனம் கூப்பிடுகிற வழியா?
யாரோ எதறகோ
கூப்பிடுகிறார்....
தெரியவில்லை
கூப்பிட்டுத்தான் பார்ப்போமே.
ஹலோ ..ஹலோ.
......................
அந்த படுக்கையறையில்
ஒரு டாக்டர்
திடீரென்று படுக்கையிலிருந்து
விழித்து எழுகிறார்.
அந்த ஹலோ ஹலோ குரல்
அவருக்கு கேட்கிறது.
எங்கிருந்து ....
தெரியவில்லை.
அவர் தன் மார்பை உற்றுக்
கவனிக்கிறார்.
அவருடைய "ஸ்டெத்"
அவருடைய காதுகளில் மாட்டியிருக்கிறது..
இது எப்படி...?
என்று யோசிப்பதற்குள்
அந்த கருவியிலிருந்து
அந்த குழாயிலிருந்து சத்தம் தொடர்கிறது.
அவர் வேல வெலத்துப் போகிறார்...
(தொடரும்)
___________________________________________________________________________
சொற்கீரன்
ஹலோ ஹலோ....2
___________________________________
சொற்கீரன்
மருத்துவர் செவிக்குழாயில்
அந்தக்குரல்களின்
குற்றால அருவிகளில்
ஒரு "புலியருவி"க்குரல்.
ஆனாலும் டாக்டருக்கு
எவனோ ஒருவனின்
பூனைக்குரலாகத்தான் பட்டது.
என் குரல் கேட்ல்கிறதா?
கேட்கிறது...
சொல்லுப்பா...இல்ல இல்ல
சொல்லுங்கப்பா!..
அ அ அ..து...அது!
அந்த மரியாதை...இருக்கணும்.
சரி..சரி அப்புறம்.
இங்கே இந்த
கொம்பு மொளச்ச முண்டங்களோடு
தாண்டவம் ஆடி ஆடி..
அலுத்துதினாலே
அப்படியே உங்க அண்ணா சாலையா...
ஆமா அந்த மவுண்ட்ரோட்டிலே தான்
ஊர்த்துவ அபிநயம் பண்ணிகிட்டே
வர்ரேன்.
அங்க ஒரு பாதசாரி
இன்னா நாய்னா
தூக்கத்துல நடக்கிற வியாதியா?ன்ட்ரான்.
ஆமா
உங்களுக்கு "சோம்னா அம்புலிஸமா?"
அட நீ கூட கண்டுபிடிச்சிட்டியேப்பா...
நான் தான் அந்த
"சோமசுந்தரன்னு..
அம்புலியை சடையில் சூடியிருக்கிறத
பாத்துட்டியா?....
சரி தான்...
டாக்டருக்கு புரிந்து விட்டது..
ஒ..கீழ்ப்பாகத்துலேருந்து
தப்பிச்சு வந்த "பட்சி"யா...?
ஆனா
அந்த ஸ்டெத் மேஜையிலிருந்து
என் காதுக்கு எப்படி வந்தது?
அதை ஏன் நான்
என் "காதுல"வச்சுக்கிட்டிருக்கேன்?
ம்ம்ம் ஒண்ணும் புரியலையா?
அது எப்படி உன் காதுலேயே மாட்டிகிட்டு
உன் காதுலேயே கேக்க முடியும்னு தானே...
.......குரல் தொடர்ந்தது...
இப்போது டாக்டருக்கு
மீண்டும் வெல வெலத்து
வியர்த்து வடிந்தது....
_____________________________________________
erode thamizhanban
எத்தனையோ
தூக்கங்ளோடு பேசினாய்
எத்தனையோ
விழிப்புகளிடம் வாய்மூடி
அமைதி காத்தாய்
எத்தனையோ வினாக்களிடம்
பொருத்தமற்ற விடைகளாய்க்
கைகுலுக்கினாய்
உடையணியாச்
சொற்களோடு யாரையும் போய்ச்
சந்திப்பாயோ?
உடைதேடித்தெருத்தெருவாய்
அலைந்தாய் ஆனால்
ஒருநாளும் உண்மை உன்னோடு
வந்தததுண்டோ?
பாசாங்கை மினுமினுப்பை
உன் வரவேற்பு வாசலிலேநீ எதற்கு
நிறுத்தவேண்டும்?
வந்தவரும் போனவரும்
தமக்கேற்ப உனைஎதற்கு அடித்தடித்துத்
திருத்தவேண்டும்?
ஒருமுறைதான் வாழ்க்கை
ஒத்திகையில் இதைநடத்தி முடித்துவிட்டால்
அரங்கேற்ற மேடை உனக்காக
எங்கிருக்கும் சொல்வாய்!
ஒத்திகையே நாடகமோ?-தலைப்பு
26-02-2025 பிற்பகல்2-10
-----------------------------------------------------------------------
ஒரு காசும்
செலவுசெய்யாமல் உனக்குக்
கிடைத்தது
ஒப்பற்ற ஒன்று;ஒன்றே ஒன்று.
அதுதான் இவ்வுலக வாழ்க்கை!
பரிந்துரை பெற்றும்
யாருடையஅலுவலகத்திற்கு
விண்ணப்பம் போட்டுக்காத்திருந்தும்
இப்பிறவி
உனக்குக் கிடைக்கவில்லை.
முழு இலவயம்
உனக்கான உடம்பு
ஒரு சுண்டு விரலைக்கூட
உன்னையே
செய்துகொள்ளுமாறு யாரும்
விட்டுவிடவில்லை.
வாழ்க்கைக்குள் நுழைய உன் மூச்சு
எவரிடமும் சாவி கேட்டுக்
கெஞ்சவில்லை.
கள்ளச் சாவி தருகிறோம் என்று
முன்வவில்லை எவரும்.
அரசாங்கமோ
தனிமுதலாளிகளோ நீ கேட்டுக்
கொடுத்ததல்ல
தூக்கமும் விழிப்பும்.
நீ
தூங்கினால் கனவுகளை அழைத்து
விளையாடலாம்.
விழித்தால் நனவுகளை
நீ விரும்பியபடி வடிவமைத்துச்
செயற்படுத்தலாம்.
நடந்தால் நாலுபேர் வீட்டில்
விளக்கெரியலாம்
பேசினால்
தடுமாறும் மானுடத்துக்குத்
தடங்கள் திறக்கலாம்
சிரித்தால்
சின்னஞ்சிறியவர்கள் கூடைகளில்
புன்னகை நிரம்பலாம்
அன்பை
நீ விரும்பும் அளவு நீயே
சம்பாதிக்கலாம்
நீயே செலவிடலாம்.
அன்புக்கு
அரசாங்கம் வரிபோட முடியாது.
விலையில்லாத புன்னகையைச்
செலவில்லாமல்
சேதாரம் இல்லாமல்- ஏன்
செய் கூலியில்லாமல்கூட நீயே
செய்யலாம்.அணியலாம்
அணிவிக்கலாம்.
வயதுகள்
உன்னோடு பேசுவதுபோல்
வாழ்க்கை பேசாது
நீயே
தினமும் நலமா? என்று வாழ்க்கையிடம்
நேயம்ததும்பக் கேள்!
வயது
கைகால் வலி காய்ச்சல் இருமல்
பற்றியேபேசும்.
மருந்துப் பெயர்களையே
மந்திரமாக உச்சரித்துக்கொண்டிருக்கும்
வாழ்வுதான்
அன்பு குறைந்ததுபற்றி
அருள் விலகியதுபற்றி
பொறுமை மங்கியதுபற்றிப்
பட்டியல்போடும்.
வாழ்வுதான்
உனக்குள் இருக்கும் அறத்துக்குப்
புத்தரை ஏசுவை நபியை
வடலூர் வள்ளலாரை நினைவுபடுத்திக்
கொண்டே இருக்கும்.
வயது
நீ வளர்க்காமல் தானேயாக
வளரும்
வாழ்க்கையை நீதான்
வளர்த்தெடுக்கவேண்டும்!
வயதும் வாழ்வும்-தலைப்பு
24-02-2025 மாலை 6-20
________________________________________________________________________
வயதும் வாழ்வும்
--------------------------------------------
வயது மரங்களின் "போன்சாய்"
உன் ஒருசொட்டு
சிந்தனையில்
உன் எதிரே உன் மூச்சுகளின்
கிளை அடர்த்தியில்
இலைப் பின்னலுக்குள்
உன்னோடு
கண்ணா மூச்சி விளையாடும்.
உன் வண்ண வண்ணச் சட்டைகளின்
பட்டாம்பூச்சிகளின்
சிறகுத்துடிப்புகளோடு
சிலிர்த்துக்கொள்ளும் .
அந்த மின்னல் சாட்டை வலியில்
காதல் தேன் துளிர்க்குக்ம்..
எந்த வீடு?எந்த முகம்?
எந்த வாய்க்கங்கரை?
எந்த குடத்துடன்
நிலவுகள் முகம் கவிழ்க்கும்?
ஊகும்.... தெரியவில்லை?
வாழ்க்கையை
எச்சமிட்டு செல்லும் வெறும்
காக்கைகளா நாம்?
அதுவும் தெரியவில்லை.
ஒரு நாள்
அந்த மின்கம்பத்துக் கம்பியின்
"ஸ்பரிசத்தில்"
தொங்கிய பொது..
கீழே
கருங்கடலின் குரற்கடல்களாய்..
காக்கைகள்.
---------------------------------------------------------------
சொற்கீரன்.
வயதும் வாழ்வும் பற்றி
24.02.2025 ல்
ஈரோடு தமிழன்பன் அவர்கள்
எழுதிய கவிதை யின்
கவிதை இது.