வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

வெண்ணிலவோடு சடுகுடு

 

வெண்ணிலவோடு சடுகுடு

______________________________________

ருத்ரா



"வெண்ணிலவே வெண்ணிலவே

விளையாட வருவாயா"

இவன் அவளை பெண்ணாக்கி

விளையாடக்கூப்பிடுகிறான்.

அவள் முகப்பருக்கள் எல்லாம்

மோகம் நொதிக்கும்

கிண்ணத்தின் பூங்குமிழிகள் என்று

புல்லரிக்கின்றான்.

இந்த காதல் சடுகுடு ஆட்டங்களுக்கு

"வணிக வேட்டை"க்கு தயார் படுத்தும்

ரெஃப்ரீக்கள் நீண்ட விசில் ஊதிவிட்டார்கள்.

விண்வெளி ஆராய்ச்சிக்குள் 

நம் மண்வெளியும்

மனிதம் எனும் மனவெளியும் 

மாண்டு போகும் படி

ஒரு வெறி பிடித்த போட்டியில் 

செயற்கையான சூப்பர் நோவா ஒன்று

எல்லாவற்றையும் பொசுக்கிவிடும் 

அபாயங்கள் கூட புதைந்து கிடக்கின்றன.

கார்ப்பரேட்டுகளும்  விஞ்ஞானமும் காதலோடு

இப்படி கை கோர்த்துக் கொண்டபின்

நிலா நிலா ஓடிவா

மல்லிகைப் பூ கொண்டு வா

என்பதற்கெல்லாம் இனி

"ட்ராஷ் பின்"தான் அடைக்கலம்.

ஓ!துடிப்பு மிக்க 

இருபத்தியொன்றாம் நூற்றாண்டு இளைஞனே

உன் மெஷின் லேர்னிங்கை

இன்னும் கூர்மைப்படுத்திக்கொள்.

நேற்று நீ கண்டுபிடித்த 

ஒரு சேட் ஜிபிடி ஆப் மூலம்

நிலவுக்குள் சுரங்கம் வெட்டி

புதுக்கனிமம் கண்டுபிடிக்கலாம்.

அது இந்த 

ஒளிவேகம் போல் ஆயிரம் மடங்கு

வேகம் போகும் 

லேசர் கதிர்வீச்சு ஏவுகணைகளை

உன் முன் நிறுத்தி விடலாம்.

அணுக்கருக்குள்ளும் பிளந்து கொண்டுபோய்

அதன் ஆற்றல் தார்ச்சாலையில்

கருந்துளைக் குழல் வழியாய் பயணிக்கலாம்.

பிரபஞ்சங்களை மனிதன் தன் வீட்டு

அஞ்சறைப்பெட்டிகளாய்க்கூட 

ஆக்கிக்கொள்ளலாம்.

அப்புறம் என்ன?

ஆயிரக்கணக்கான அந்த எக்ஸோப்னெட்டுகள்

நோக்கி படையெடுக்கலாம்.

நம் பூமி மாதிரியே உள்ள அந்த‌

பூமியில் எப்போதும்

வைரங்களின் மழை தானாம்.

இப்படியும் கொஞ்சம் கற்பனையால்

வடை சுடுவது தானே

"சை ஃபை" திரைப்படங்கள்.

இப்போது அந்த நிலவுப்பெண்ணை

கொஞ்சு.

கண்ணே கொஞ்சம் என்னை

உற்றுப்பாரேன்.

எங்கும் வைர மழை தான்...

வெண்ணிலவே வெண்ணிலவே

அவன் மறுபடியும் 

அந்த வெண்ணிலவோடு

சடுகுடு விளையாட ஆரம்பித்து விட்டான்.


_________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக