பேய்க்கற்பனை
_______________________________________________________
ருத்ரா
கடவுள்கள்
அழகிய மலரைக்கையில் ஏந்தி
புன்னகை பூத்தால் போதுமா?
கடவுள் கற்பனையாளர்களுக்கு
ஒரு பொறி தட்டியது.
அது ஒரு பேய்க்கற்பனை.
இந்த அன்பின் வெளிச்சம்
எவனுக்கு வேண்டும்?
கடவுள் என்பவன்
நாக்கு துருத்திக்கொண்டு
கோரைப்பல் காட்டி
மனிதக்குடல்களை மாலையாக
சூட்டி
கபாலங்களின் மேட்டில் உட்கார்ந்து
ஒரு "பய தரிசனத்தை"
விஸ்வரூபம் காட்டவேண்டும்.
அதிலிருந்து முளைக்கும்
பயபக்தியில்
மனிதர்களின்
அறிவு முயற்சி
ஆற்றல் எழுச்சிகள் யாவும்
கிள்ளி எறியப்படவேண்டும்.
கடவுள்கள் இருக்கவேண்டுமானால்
மனிதர்களுக்கு இடம் இருக்கக்கூடாது.
மனித வெற்றிகள்
மண்ணோடு மண்ணாக்கப்படவேண்டும்.
இந்த அடிநிலையின் சமுதாய உளவியலே
சாதி வட்டங்களில் நச்சுக்குமிழிகளை
மூச்சு விடத்தொடங்கியிருக்கிறது.
ஆம்!
மாமன்னன் திரைப்படத்தின்
வில்லனே
இப்போது விண்ணோங்கிய வீரனாக
தெரிவதாக
ஒரு ட்ரெண்டிங் வந்திருக்கிறது
என்கிறார்கள்.
இது எவ்வளவு
அபாயகரமானது?
கொடூரமானது?
மனித மலர்ச்சியே
இந்த அண்ட மலர்ச்சியின்
அறிவு மகரந்தங்களை ஏந்தியிருக்கிறது
என்ற பரிணாமமே
குழி தோண்டி புதைக்கப்பட
ஒரு வெறிப்படை கிளம்பியிருக்கிறது.
மனித வெள்ளமே
இந்த கட்டுகளை உடைத்துக்கொண்டு
அலையாய் எழு.
உன் மனிதநேயமே இங்கு
கூர் தீட்டி எழும் ஆயுதம்.
உன் படையே வெல்லும்.
இந்த பொய்மூட்டங்கள்
கலைந்து ஓடட்டும்.
__________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக