அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்....
__________________________________________________
மனிதா!
இந்த வெண்ணிலவோடு
எத்தனை விளையாடியிருக்கிறாய்?
உன் சிறுவயதுகளின்
அரைஞாண் கொடியோடு
பின்னிக்கிடந்தபோது
இந்த வெண்ணிலவை உருக்கித்
தேரோட்டம் நடத்தி
களிப்பு மிகக்கொள்வாய்.
உலகத்து இலக்கியங்களுக்குள்
வெளிச்சம் மிகுந்த கண்களையும்
உணர்வு மிகுந்த இதயங்களையும்
இந்த நிலவு தானே
பதியம் இட்டது.
இந்த நிலவை மனிதன்
பார்த்த ஒரு அரிய கோணமே
இந்த உலகை காதல் எனும்
இனிய தீ பற்றிக்கொள்ளச்செய்தது.
மனிதனின் விஞ்ஞான உயரம்
ஓ நிலவே!
உன் கால்களுக்கு ஒரு கொலுசு மாட்ட
ஆசைப்பட்டது.
வெட்கப்படாதே..
வா வந்து
என் இடுப்பில் உன் அறிவொளியின்
ஒரு ஒட்டியாணத்தை மாட்டிவிடு
என்று
இவனுக்கு ஆசை ஊட்டியது நீ தானே.
மலை மேலே ஏறிவா மல்லிகைப்பூ கொண்டு வா
என்று ஏதோ ஒரு மழலை
உன்னிடம் அஞ்ஞானத்தோடு கொஞ்சியது.
இப்போது
அந்த அஞ்ஞானமும் விஞ்ஞானமும்
உன்னோடு ஒரு
அகநானூறு பாடத்துடிக்கிறது.
எனக்கு முகம் காட்டமலேயே
எங்கே நீ ஓடுகிறாய்?
உன்னை விட மாட்டேன் என்று
இவன் உன்னைத்தொடர்கிறான்.
இவன் அறிவியலின் நுண்ணறிவு முத்தம்
உன் மீது படர விரைந்து கொண்டே இருக்கிறது.
இதோ
இவனது வெற்றி
உன் மீது தொடும்போது
இந்த பிரபஞ்சமே ஒரு அந்திச்சிவப்பில்
உன் நாணத்தையே
ஒரு மெல்லிய திரையாக்கி
அழகு சேர்க்கட்டும்.
மானிட முயற்சியின்
இந்த கலித்தொகை
எங்கள் களித்தொகை ஆகட்டும்.
இனி எங்கும் எதிலும்
வெற்றி வெற்றி வெற்றியே தான்.
___________________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக