சனி, 5 ஆகஸ்ட், 2023

மிச்சம்



என்ன பேசவேண்டும்?

என்ன கேட்கவேண்டும்?

என்ன அறிய வேண்டும்?

என்ன எழுத வேண்டும்?

எல்லாம் பற்றி

வண்டி வண்டியாக இருக்கிறது.

நூற்றாண்டுச்சக்கரங்கள்

தடம் பதித்தது போக‌

தடம் அழிந்தது போக‌

அதோ...மிச்சம்

கட்டமண்ணும் குட்டிச்சுவரும் தான்

இருக்கிறது.

மூளை எறும்புகள் 

ஊர்ந்து ஊர்ந்து

அந்நியர்கள் திறந்து வைத்த‌

அறிவுக்காற்றில்

அகலம் தெரிந்தது 

ஆழம் தெரிந்தது,

உயரம் தெரிந்தது.

அதுவரை அமுக்கிக்கிடந்தது தான்

அநீதி என்ற‌

ஓர்மை உறைத்தது.

நான் தான் உனக்கு எல்லாம்

என்று

ராட்சச கரப்பான் பூச்சியை

நிழல் காட்டிய‌

கடவுள்கள் எல்லாம்

வெல வெலத்துப்போயின.

மனிதனின் செயற்கை மூளைக்குள்

ஆயிரம் வேதங்கள்.

ஆயிரம் புராணங்கள்.

உள் விசை எல்லாம்

ஒண்ணுக்கு ஆயிரம் மடங்கு

லாபம் குவிக்கும் வியாபாரமே.

பாருங்கள்

அதோ அந்த தராசில்

காயலாங்கடை வியாபாரமாய்

உலகங்கள்

சந்திரன்கள்

செவ்வாய்கள் எல்லாம்

விற்றுத்தீர்ந்து கொண்டிருக்கிறன.

கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ள 

ஆக்சிஜனும்

குடிக்கத்தண்ணீரும் வேண்டும்.

இந்த வெர்ச்சுவல் பூமியின்

பொம்மைச்சோற்றுக்கவளத்தில்

பசி போல ஒரு பசியே

நமக்கு பேட்டரியாகவும் சார்ஜாகவும் 

இருக்கிறது.

ஏதோ ஒரு சூப்பர்நோவா

வெடிக்கப்போகிறதாம்..

அதிலிருந்து வரும் வினோத சிலிகானின்

விந்தணு கருமுட்டைகளில்  தான்

இனி 

புதிய மனிதன்..புதிய கனவு..


___________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக