உலக யானைகள் தினம்
______________________________
ருத்ரா
யானைகள் என்றால்
சர்க்கஸும் சேர்ந்தே தான்
நினைவுக்கு வருகிறது.
மனிதர்கள்
அவற்றிற்கு தோழர்கள்
என்று ஆகி விட்ட பிறகு
இந்த "துன்புறுத்தல்"
எங்கிருந்து வந்தது?
அந்த இரண்டு யானைக்குட்டிகள்
வெறும் "ஆஸ்கார்" விருதுக்காகவா
நம் கண்களில் அந்த
அருவியை இயற்கையின் இதயமாக்கி
பெருகச்செய்தன?
என்ன செய்வது?
வர்த்தகத்தனமான கழுகுகள் மேலே
ஆலவட்டம் போடும்போது
இந்த சட்டங்கள் தான்
அவற்றைப்பாதுகாக்கின்றன.
நம் சித்தாந்தத்தை நாமங்களாக்கி
அவற்றை அலங்கரிப்பதாக
நாம் பூரித்துக்கொள்கிறோம்.
ஒரு காதில் சங்கு.
இன்னொரு காதில் சக்கரம்.
கொசுவையும் ஈக்களையும்
விரட்டத்தான் அந்த காதுகள்
விரைகின்றன.
பாஞ்சஜன்யத்து பக்தியை
அது அறிந்திருக்கவில்லை.
நாம் வட்டமாய் கூடி
உற்சாகக்குரல் எழுப்பும்போது
அவைகளும்
களிப்பின் பிளிறல்களில்
நம்மிடம் ஏதோ பேசுகின்றன.
ஆம்.
யானைக்குள் மனிதனும்
மனிதனுக்குள் யானையும்
புகுந்து கொள்ளும்போது
இயற்கை இழைந்த மானிடம் அங்கே
கசியத்தான் செய்கிறது.
நம் வக்கிரங்களை அவற்றின்
புராணங்கள் எனும்
சங்கிலிகளால் பிணைக்கவேண்டிய
அவசியம் இல்லை.
அந்த பாரதி என்னும் நேசக்கவிஞன்
விளாம்பழத்தோடு
கணேசா என்று கூப்பிட்டபோது
அந்த மொழி எப்படி அதற்கு
"மிலேச்சமாய்" போனது?
உயிரின் பரிணாமம் என்பதும் கூட
ஒரு நுட்பமான கணிதம்.
நம் பக்திப்பரவசம் அதற்கு ஒரு
பாறாங்கல் என்பது
ஒரு பிரபஞ்சப்புதிர் ஆகும்.
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக