வியாழன், 17 ஆகஸ்ட், 2023

அதோ தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி.


_______________________________________________

இபியெஸ்.



உன்னை 

மறுப்பவனுக்கும்

மதிப்பவனுக்கும் 

இடையே ஓடும்

அந்த மெல்லிழை எனும்

தின் ரெட் லைன் என்ன?

இறைவா?

அதற்கு பதில் இன்னும் வரவில்லை.

அதுவும் ஒரு ஏலியன் தான்

என்கிற அறிவுஜீவிகளும்

சோடாப்புட்டி கண்ணாடி 

ஜோல்னா பை சகிதம் 

அலைகிறார்கள்.

பின் நவீனத்துவம் என்ற பெயரில்

சித்தாந்தங்கள் 

செக்ஸ் முனைப்புகளில்

மையம் குவிக்கிறது.

குரோமோசோம் சேர்க்கை தானே.

பாம்பு என்றால் என்ன?

பன்றி என்றால் என்ன?

மூளை நரம்புகளில் 

எந்த உயிர் வேண்டுமானாலும்

யாழ் இசைத்துப்பார்க்கட்டுமே?

இப்படி

காலப்பாம்பின் வால் பகுதிக்குள் கூட‌

புகுந்து

புராணங்களை ரோபோடிக்ஸில் 

காக்டெய்ல் நொதிப்புகளாக்கி

பிம்பங்களின் பிம்பங்களுக்குள்

கூடு கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

சஹராக்ஷம் சஹஸ்ரசீர்ஷம் 

என்று ஏதோ ஒரு உபநிஷதம்

ஜீவாத்மா பரமாத்மாவை 

கலர்ஃபுல்லாக கைமாப்பண்ணி

வேதாந்தம் எனும் தட்டில் வைத்து

சிங்காரித்துக்கொண்டிருந்தாலும்

மனிதம் 

எனும் பூச்சியோ புழுவோ

அவர்கள் கால்களால் நசுக்கப்பட்டு

கொண்டுதான் இருக்கின்றன.


கடவுளே மறுப்பவன் ஆகி

அந்த "மதிப்பவன்களோடு"

மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.

அந்தக்கேள்வி

இன்னும் அங்கே தொங்கிக்கொண்டு தான்

இருக்கிறது.

அந்த சாட் ஜிபிடியிடம்

இதை கல்லெறிந்து பார்க்கலாம்

என முயற்சித்தேன்.

அது இம்மானுவல் கெண்ட்

பெட்ரண்ட ரஸ்ஸல் என்று

ஆரம்பித்து

சொமர்செட் மாம்

ஜீன் பால் சாட்டர்

(இப்பெயரின் பிரெஞ்சு உச்சரிப்பு

ஒரு குலாப் ஜாமுன் மாதிரியான‌

இனிய கொழகொழப்பு ஆகும்)

இன்னும் எத்தனையோ அறிஞர்களின்

எபிஸ்டமாலஜி ஆஃப் காட் பற்றிய‌

கோட்பாடுகளை குவித்தது.

சமீபத்திய ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்த‌

செய்ற்கை மூளைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும்

பிரிடேட்டார் வரை 

பிரித்து மேய்ந்தது.

அந்த கேள்வி மட்டும் இப்போதும்

மிக அழகான அறிவாய்

நம்மிடையே நெளிந்து கொண்டிருக்கிற‌து.


_________________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக